‘மெய்யழகன்’ போன்ற முழுநீள மென்னுணர்வுப் படங்கள் ஓர் அதிகாலை தியானம் போன்ற திரை அனுபவத்தைக் கொடுக்கும். குறும்படங்களில் இதை எதிர்பார்க்க முடியாது. ஆனால், கோகுல் கிருஷ்ணன் தன்னுடைய முதல் முயற்சியாக இயக்கியிருக்கும் ‘நேர்காணல்’ என்கிற 30 நிமிடக் குறும்படத்தில் இதைச் சாத்தியம் ஆக்கியிருக்கிறார்.
‘தர்ம யுகம்’ என்கிற நாவலுக்காகப் பேசப்படுகிறார் ராஷ்மி (25) என்கிற இளம் பெண். எழுத்து வசமான அளவுக்குப் பொது மேடையிலோ கேமரா முன்போ பேசும் துணிச்சல் அந்த இளம் எழுத்தாளருக்கு இல்லை. இந்த வேளையில் பிரபலத் தொலைக்காட்சிக்கு ராஷ்மி நேர்காணல் கொடுத்தாக வேண்டிய கட்டாயம்.
பேட்டி கொடுக்கும் அளவுக்குத் தனக்குத் தைரியம் இல்லை என்று நம்பும் ராஷ்மிக்கு, ‘பப்ளிக் ஸ்பீகிங்’ பயிற்சி கொடுக்க அறிவழகன் என்கிற இளைஞரை அனுப்புகிறார் ராஷ்மியின் தோழி. சுவாசப் பயிற்சியில் தொடங்கும் அவர்களுடைய அறிமுகம், இறுதியில் காதலை சுவாசிக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறது. இதில் எதிர்பாராத திருப்பம் அந்த அறிவழகன் யார் என்பதும் ராஷ்மியின் தன்னம்பிக்கைக் குறைபாட்டின் பின்னாலுள்ள கதையும்.
மிக மலிவான தற்செயல் நிகழ்வாக மாறிவிட வாய்ப்புள்ள கதையின் முக்கியத் திருப்பத்தை, தூயக் காதலின் ஆன்மாவாக மாற்றியிருக்கிறார்கள் இக்குறும்படத்துக்கான திரைக்கதையை எழுதியிருக்கும் பகலவன் - ஜிகே இருவரும். சினிமாத்தனம் துளியும் இல்லாத படத்தின் முடிவைப் பார்வையாளர்கள் வசமே விட்டிருக்கும் இந்தக் குறும்படைப்பின் காட்சிப்படுத்துதலும் (ஒளிப்பதிவு ஆதித்யா மான்) கிரிஷ் லட்சுமணனின் மனதுள் இழையும் இசையும் ஒரு முழுநீள ஃபீல்குட் படம் பார்த்த உணர்வை அளிக்கின்றன.
ராஷ்மியாக நடித்துள்ள ஐக்கியா பாலகிருஷ்ணன், அறிவழகனாக நடித்துள்ள சிவம் இருவரும் அவ்வளவு பொருத்தமான தேர்வு. ஒலி வடிவமைப்பு, உடைகள் தேர்வு தொடங்கி ஒவ்வோர் அம்சத்திலும் நேரில் காணும் ஒரு கவிதையாக விரிகிறது இந்த ‘நேர்காணல்’ குறும்படம்.