நடிகர் சித்தார்த்
கார்கில் போரின்போது இந்திய விமானப்படை மேற்கொண்ட ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ (Operation Safed Sagar) நடவடிக்கையை மையமாகக் கொண்டு வெப் தொடர் உருவாகியுள்ளது. இதில் சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், மிஹிர் அஹுஜா, அர்னவ் பாசின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் ஆக. 7 முதல் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதில் நடித்தது பற்றி சித்தார்த் கூறும்போது, “இந்தக் கதையின் பின்னணி போராக இருக்கலாம். ஆனால் இது மனித உறவுகளின் கதை என்பதை உணர்ந்தோம். இந்திய விமானப்படை வீரர்களின் பார்வையிலிருந்து இந்த கதைச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு மனிதரின் மனவலிமையையும் இந்தத் தொடர் பேசும். விமானப் படை என்றாலும் படத்துக்காக நாங்கள் வானில் எந்தக் காட்சியையும் படமாக்கவில்லை. முழு படப்பிடிப்பும் தரையில்தான் நடந்தது.
ஆனால், இந்தியாவில் இதுவரை பயன்படுத்தப்படாத தொழில்நுட்பத்தின் மூலம் விமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இயக்குநர் ஓனி சென் மற்றும் ஒளிப்பதிவாளர் சேது ஆகியோர் மிக்-21 போர் விமானத்தின் காக்பிட்டை அப்படியே மீண்டும் உருவாக்கினர். அதில் நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. இதற்காக தீவிர பயிற்சியும் தேவைப்பட்டது. இந்தப் படப்பிடிப்பு எனக்கு மிகவும் கடினமானதும் சவாலானதுமாக இருந்தது.
படக்குழு ஒவ்வொரு விஷயத்தையும் மிகத் துல்லியமாக மீண்டும் உருவாக்கியது. ஹைட்ராலிக் அமைப்பில் பொருத்தப்பட்ட போர் விமான காக்பிட் செட்டில் நாங்கள் படமாக்கினோம். இந்திய விமானப் படையை மையமாகக் கொண்ட படத்தில் நான் நடிப்பது இதுவே முதல் முறை” என்று தெரிவித்தார்.