ஓடிடி தகவல்

‘ஆக்டோபஸ்’ சீரிஸ் ட்ரெய்லர் எப்படி? - திகிலும் தேடலும்

ப்ரியா

ஜெயச்சந்திரா ஹாஷ்மி இயக்கியுள்ள ‘ஆக்டோபஸ்’ இணையத் தொடரின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

ஜீ5 ஓடிடியின் அசல் தொடராக வெளியாக இருக்கும் இதன் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குடியிருப்பு ஒன்றில் இரவில் பெண்ணின் அலறல் சத்தத்துடன் தொடங்குகிறது ட்ரெய்லர். யார், எதற்காக அலறினார் எனத் தெரியாமல், அக்கம் பக்கத்தினர் ஒவ்வொருவரும் தாங்களும் அலறல் சத்தத்தைக் கேட்டதாக மட்டும் அடுத்தவரிடம் தகவல் சொல்கின்றனர்.

அந்தக் குடியிருப்பில் காதல் திருமணத்தால் இருவீட்டாரால் நிராகரிக்கப்பட்ட நிகிதா என்ற பெண் வசிக்கிறாள். பகலில் பக்கம் பார்க்காமல் காதலைப் பொழியும் அவள் கணவன், இரவில் அவளை அடித்து துன்புறுத்துகிறான். இந்தச் சூழ்நிலையில் நிகிதா திடீரென காணாமல் போகிறாள்.

யாரும் இல்லாத நிகிதாவுக்கு குடியிருப்புவாசிகளே உறவுகளாகி, போலீஸில் புகார் தருகின்றனர். அந்த வழக்கின் மீதான பாரா முகத்தால், நிகிதா என்னவானாள் என அவர்களே தேடும் படலத்தில் இறங்குகின்றனர். நிகிதாவுக்கு என்னவானது என்கிற கேள்வியை முன்வைத்து எதிர்பார்ப்பைக் கிளப்புகிறது 2.34 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லர்.

நிகிதா தன் கணவனை விட்டுத் தராமல் பேசுவது, குடியிருப்புவாசிகளிடம் அன்பைப் பொழிவது, யாரிடமும் பேசாத அவள் கணவனின் சந்தேக பார்வை, நீதிமன்றத்தில் அந்த குடியிருப்பே வந்து சாட்சி சொல்வது போன்ற காட்சிகள் ஒரு த்ரில்லர் தொடருக்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்கின்றன.

மொத்தம் 7 எபிசோடுகளைக் கொண்டதாக உருவாகியுள்ள இந்த இணையத் தொடரில் அஸ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT