நடிகை பாவனா
முதல் காதலின் இனிமையை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘நோட்புக் 90ஸ்- காதல் பிளாஷ்பேக்’. இதை சதாசிவம் இயக்கியுள்ளார். நீலன் எழுதியுள்ளார். இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரின் ஸ்ட்ரீட்டைல்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்தொடரில் பாவனா, முஸாம்மில் இலியாஸ், யுவா ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். நவ.23-ம் தேதி சோனி விழா மற்றும் சோனி லிவ் தளத்தில் இத்தொடர் ஒளிபரப்பாகிறது.
திருச்சியைப் பின்னணியாகக் கொண்ட இத் தொடரில், பள்ளிப் பருவத்தில் நடக்கும் விளையாட்டுத்தனமான குறும்பில் தொடங்கும் நட்பு, எதிர்பாராதவிதமாக முதல் காதலாக மாறுகிறது. முதல் காதல் தரும் மகிழ்ச்சி மனதில் இருப்பதைச் சொல்லத் தயங்கும் தருணம், தங்கள் காதலும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற நம்பிக்கை. புரிதல் இல்லாத தருணங்கள், வலிக்கும் பிரிவுகள் என இளமைப் பருவக் காதலின் பல உணர்வுகளை இந்தத் தொடர் அழகாக எடுத்துக்காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் கூறும்போது, “இத்தொடர் மூலம் நம் மனதுக்கு நெருக்கமான ஒரு காலத்தை மீண்டும் நினைவுகூர விரும்பினேன். 90-களில் நட்பு, குடும்பம் மற்றும் உறவுகளுக்கு தனி அழகு இருந்தது. அந்தக் காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதுடன் அப்போது நம் வாழ்க்கையை அழகாக்கிய தருணங்களையும் இந்தத் தொடர் நினைவுபடுத்தும் என்று நம்புகிறேன். இந்தத் தொடரைப் பார்க்கும் ஒருவர், தனது பழைய நண்பரை நினைத்துப் பார்த்தாலோ பழைய நினைவுகளைப் புன்னகையுடன் நினைவு கூர்ந்தாலோ அதுவே எனக்கு மகிழ்ச்சி” என்றார்.