ரூ.7 லட்சம் கோடிக்கு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றுகிறது.
புகழ்பெற்ற ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், ஹாலிவுட்டின் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் திரைப்பட, தொலைக்காட்சிப் பிரிவுகளையும் அதன் ஸ்ட்ரீமிங் பிரிவையும் வாங்குவதற்கான ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 7,200 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய். இது ஹாலிவுட் வரலாற்றில் நடந்த மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், புகழ்பெற்ற ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவையான 'எச்பிஓ மேக்ஸ்' ஓடிடி தளம் நெட்ஃப்ளிக்ஸ் வசமாகின்றன. 'தி சோப்ரானோஸ்' (The Sopranos), 'தி ஒயிட் லோட்டஸ்' போன்ற ஹெச்பிஓ-வின் பிரபலமான படைப்புகள் நெட்ஃப்ளிக்ஸுக்குச் சொந்தமாகின்றன.
அதுமட்டுமின்றி, உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'ஹாரி பாட்டர்', டிசி காமிக்ஸ் போன்ற பிரபலமான திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் உரிமைகளும் நெட்ஃப்ளிக்ஸ் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றன.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனப் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு $27.75 ரொக்கமாகவும், நெட்ஃப்ளிக்ஸ் பங்காகவும் வழங்கப்படும். சிஎன்என், டிபிஎஸ் போன்ற கேபிள் டிவி சேனல்கள், ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் தனியாகப் பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2026-ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.