சூரி நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘மண்டாடி’ திரைப்படம் அக்டோபர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் இந்தியா சவுத் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாக்கதான போற இந்த காளியோட ஆட்டத்த’ என்று கூறி ‘மண்டாடி’ படம் அக்டோபர் 8-ம் தேதி வெளியாகும் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கும் ‘மண்டாடி’ படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் கீழ் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படத்தில் சூரியுடன், மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
ராமநாதபுரத்தின் கடலோர கிராமமான முகவைப்பட்டினத்தில் மாரி என்ற இளைஞர், சாட்டப்புலி என்பவரையும் அவரது மகனையும் கொடூரமாகத் தாக்குகிறார். ஆனால், கோயில் திருவிழாவில் ஏற்படும் அமளி காரணமாக சாட்டப்புலி தப்பித்துவிட, அவரைக் கொல்லும் மாரியின் முயற்சி தடைபடுகிறது.
படகுப் போட்டியையும், அணிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செல்வாக்குமிக்க சாட்டப்புலி, மாரியைப் பழிவாங்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரிடமிருந்து தப்பிக்க சென்னைக்கு ஓடிவரும் மாரி, அங்குள்ள ஒரு தீம் பார்க்கில் வேலை செய்யும் முத்துக்காளியிடம் உதவி கேட்கிறார்.
முத்துக்காளி யார், தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் மாரியை ஏன் மீண்டும் தனது சொந்தக் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார், முத்துக்காளியின் கடந்த கால வரலாறு என்ன ஆகியவற்றை விவரிக்கிறது ‘மண்டாடி’ திரைப்படம்.
புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான கமர்ஷியல் கதைக்களத்தை கொண்டிருந்தாலும் ‘மண்டாடி’ அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், நடிகர்களின் நல்ல நடிப்பாலும் பார்வையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய திரையனுபவத்தை தருகிறது. செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
இதனிடையே ‘மண்டாடி’ படத்தின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை கடந்திருப்பத்தாகவும், உலக அளவில் ரூ.150 கோடியை கடந்து இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.