லண்டன்: உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹாரி பாட்டர்' புத்தகங்களை தழுவி எச்பிஓ மேக்ஸ் தயாரித்துள்ள 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ஏழு பாகங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட நிலையில், பல ஆண்டுகள் கழித்து இன்றைய தலைமுறைக்காக ஒவ்வொரு புத்தகத்தையும் ஒவ்வொரு சீசனாக வெளியிட எச்பிஓ திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் பாகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முதல் சீசன் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ஹாக்வார்ட்ஸ் மாயாஜாலப் பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்களைத் தேர்வு செய்யும் பாரம்பரிய சடங்குகளுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ஹாரி பாட்டர், ஹெர்மியோனி கிரேன்ஜர் மற்றும் ரான் வீஸ்லி ஆகிய மூன்று பிரதான கதாபாத்திரங்களின் பள்ளிப் பருவத்தின் முதல் அத்தியாயத்தையும், அவர்களின் நட்பையும் ட்ரெய்லர் மிக அழகாக காட்டுகிறது.
ஹாரி பாட்டர் கிரிஃபிண்டோர் பிரிவில் சேர்க்கப்படுவது, பேராசிரியர் டம்பள்டோரின் வரவேற்பு உரை, குவாடிச் விளையாட்டுப் பயிற்சி மற்றும் வகுப்பறையில் பேராசிரியர் ஸ்னேப்பின் கண்டிப்பு போன்ற காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ட்ரெய்லரை பார்க்கும்போது இதன் காட்சிகள் கிட்டத்தட்ட ஹாரி பாட்டர் படத்தின் முதல் பாகத்தை பார்ப்பது போலவே உள்ளது. ஸ்னேப் கதாபாத்திரத்தை கருப்பினத்தவராக மாற்றியது உள்ளிட்ட ஒரு சில மாற்றங்களும் தென்படுகின்றன. எனினும் தொடர் வெளியான பிறகுதான் முழுமையாக இந்த கதையை எப்படி கையாண்டிருக்கின்றனர் என்பது தெரிய வரும்.