ஜியோஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 9 சீசன்களாக வெளியான இந்நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இப்போது இதில் சாமானியர்களும் கலந்து கொள்ளும் வண்ணம் தயாராகியுள்ளது, ‘காமன் மேன்’ பிக் பாஸ் தமிழ் 10.
விஜய் சேதுபதியின் அழைப்புடன் தொடங்கிய பிக் பாஸ் காமன்மேன் முயற்சியில் மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழில்முனைவோர், பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து பல கட்டத் தேர்வுகள் மற்றும் நேர்முகப் பரிசோதனைகளின் மூலம் போட்டியாளர்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர். தற்போது, இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்புத் தேர்வுப் பயணத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், ஓவியா நடுவர்களாக இணைந்துள்ளனர். மாயா கிருஷ்ணன், இந்த ஆடிஷன் பயணத்தின் தொகுப்பாளராக இணைந்து, அத்தியாயத்துக்கு வழிகாட்டுகிறார். இந்நிகழ்ச்சி ஆக. 16 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் தினமும் ஒளிபரப்பாக உள்ளது. ஸ்டார் விஜய்யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும்.