விக்ராந்த் நடித்துள்ள ‘எல்பிடபுள்யூ– லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஜன.1-ம் தேதி வெளியாகிறது. அருணா ராக்கி திரைக்கதை எழுதியுள்ள இத்தொடரை கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.
இதில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக் ஷதா, நவீன், நிகில் நாயர், விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஹார்ட் பீட்’, ‘போலீஸ் போலீஸ்’, ‘ஆஃபீஸ்’ போன்ற வெப் தொடர்களைத் தொடர்ந்து கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘எல்பிடபுள்யூ– லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய தொடரை ஹாட்ஸ்டார் அறிமுகப் படுத்துகிறது.
அட்லி ஃபேக்டரி தயாரித்துள்ள இதன் மூலம் விக்ராந்த் வெப் தொடரில் அறிமுகமாகிறார். கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கும் ரங்கன், கிரிக்கெட் அகாடமியில் பின்தங்கிய அணியைப் பயிற்றுவித்து அதன் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்பது கதை.
இந்தத் தொடர் குறித்து விக்ராந்த் கூறும்போது, “எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டுடன் ஓடிடி தளத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட்டுடன் இருக்கும் ஆழமான தொடர்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த இத்தொடர் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் இது பிடித்த தொடராக இருக்கும்” என்றார்.