சித்தார்த், ஃபிரீடா பின்டோ முக்கிய வேடங்களில் நடித்துள்ள வெப் தொடர் ‘அனகஸ்டம்டு எர்த் ’ (Unaccustomed Earth). புகழ்பெற்ற எழுத்தாளர் ஜூம்பா லஹிரியின் அதே பெயரிலான சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்தொடரில் சித்தார்த் ‘அமித்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்திரநீல் சென்குப்தா, பர்வீன் கவுர், சயாயு ப்ளூ, ஜஸ்டின் பார்த்தா, அதி ராய் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அமெரிக்காவில் வசிக்கும் 2-வது மற்றும் 3-வது தலைமுறை இந்திய வம்சாவளியினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ள இத்தொடரில், காதல், இழப்பு, ஏக்கம் மற்றும் தங்களுக்கான அடையாளம், சொந்த ஊரை தேடும் பயணம் ஆகியவை முக்கிய விஷயங்களாக இடம்பெறுகின்றன.
ஃபிரீடா பின்டோ இப்படத்தில் பருல் சவுத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது, இவரது வாழ்க்கை எதிர்பாராத திசையில் திரும்புகிறது. தன் தந்தையின் விருப்பத்துக்காகக் கல்லூரிக் காதல் உள்பட பல்வேறு விஷயங்களை இழந்த இவர், தனது குடும்பத்துடன் இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகருக்குக் குடிபெயர்கிறார்.
அது ஏற்கெனவே அவருக்குப் பரிட்சயமான மற்றும் சொந்தமான உணர்வைத் தந்த இடமாகும். இந்த இடமாற்றம், முன்பு கைவிட்ட விஷயங்களைத் தொடரத் தூண்டுகிறது. அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது கதை. மாதுரி சேகர் திரைக்கதை அமைத்து, ஷோ ரன்னாக பணியாற்றியுள்ளார். இத்தொடர், டிச.17 -ல் நெட்பிளிக்ஸில் பிரீமியர் ஆகிறது.