நடிகர் ஆர்.மாதவன்
இந்தி தொலைக்காட்சியில், கடந்த 2000-ம் ஆண்டில் பிரபலமான டாக் ஷோ ‘ஜீனா இஸி கா நாம் ஹே’. ஜீ தொலைக்காட்சியில் வெளியான இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை மறைந்த நடிகரும் புகழ்பெற்ற தொகுப்பாளருமான ஃபரூக் ஷேக் தொகுத்து வழங்கியிருந்தார். தற்போது புதிய வடிவில் இந்த டாக் ஷோ, ஜீ-5 ஓடிடி தளத்தில் மீண்டும் அறிமுகமாகிறது. ‘ஜீனா இஸி கா நாம் ஹே- 2.0’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியை நடிகர் மாதவன் தொகுத்து வழங்குகிறார்.
இது குறித்து மாதவன் கூறும்போது, “இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மதிப்புமிக்க நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘ஜீனா இஸி காநாம் ஹே’யின் அடுத்த கட்ட பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கவுரவம். ஃபரூக் ஷேக் போன்ற அற்புதமான கலைஞர் உருவாக்கிய மரபைத் தொடர்வது பெருமையையும் பொறுப்பையும் தருகிறது.
இந்நிகழ்ச்சி வெறும் பிரபலங்களின் வெற்றிக் கதைகளைப் பற்றி மட்டுமல்ல; அவர்களை உருவாக்கிய மனிதர்கள், உறவுகள், அனுபவங்கள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியது. இந்த உணர்வுப்பூர்வமான கதைகளை புதிய தலைமுறை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.