அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ‘காந்தாரா’ படம் வெளியாகியுள்ள நிலையில், அதில் ‘வராஹ ரூபம்’ பாடல் நீக்கப்பட்டு வேறொரு பாடல் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா’. செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் உலக அளவில் ரூ.400 கோடிவரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால், திரையரங்கில் இடம்பெற்ற ‘வராகரூபம்’ பாடல் நீக்கப்பட்டு புதிய பாடல் இடம்பெற்றிருக்கிறது. பாடல் வரிகளை மாற்றாமல் வேறு ட்யூனை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு காரணம், கேரளாவின் தைக்குடம் பிரிட்ஜ் என்ற மியூசிக் பேண்ட் வெளியிட்ட நவரசம் பாடலைக் காப்பி அடித்துத்தான் ‘வராக ரூபம்’ பாடல் உருவாக்கப்பட்டது என பிரச்னை எழுந்தது. இதையடுத்து, ‘வராஹ ரூபம்’ பாடலை பயன்படுத்தக் கூடாது என படக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனால், தற்போது படத்தில் அந்தப் பாடல் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தைக்குடம் பிரிட்ஜ் ஃபேஸ்புக் பக்கத்தில், “அமேசான் பிரைம் எங்கள் பாடலான 'நவரசம்' பாடலின் பதிப்பை ‘காந்தாரா’ திரைப்படத்திலிருந்து நீக்கியுள்ளது. நீதி வென்றது! எங்கள் வழக்கறிஞர் சதீஷ் மூர்த்தி மற்றும் எங்கள் வழிகாட்டியான மாத்ருபூமிக்கு நன்றி. தங்கள் உரிமைகளுக்காகப் போராட முழு மனதுடன் ஆதரவளித்த எங்கள் இசைக்கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளது.