கண்ணா ரவி நடித்துள்ள ‘வேடுவன்’ வெப் தொடர் வரும் அக்.10-ம் தேதி வெளியாகிறது.
‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கண்ணா ரவி. தற்போது இவர் நடித்துள்ள புதிய தொடர் ‘வேடுவன்’. இதில் சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸ், ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. விபின் பாஸ்கர் இசையமைத்துள்ளார்.
த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த தொடர் வரும் அக்டோபர் 10 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வெப் தொடர் குறித்து கண்ணா ரவி கூறுகையில், “வேடுவன் எனக்கு மிக நெருக்கமான படைப்பு. இது ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணமாக இருந்தது. இதில் நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம். ஒரு நடிகனின் போராட்ட வாழ்க்கையை மட்டும் அல்லாமல் சவால்கள், முடிவுகள், தியாகங்களை வாழ்ந்தது போன்ற உணர்வைத் தந்தது. கடமைக்கும், காதலுக்கும், மக்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதை சொல்லும் கதை இது. ஒரு நடிகனாக, இது எனக்கு வித்தியாசமான சவாலாக இருந்தது” என்றார்.