ஓடிடி தகவல்

ஓடிடியில் ‘குட் பேட் அக்லி’ நீக்கம்: தயாரிப்பு நிறுவனம் Vs இளையராஜா

ஸ்டார்க்கர்

ஓடிடி தளத்தில் இருந்து ‘குட் பேட் அக்லி’ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜாவுக்கு மோதல் வெடித்துள்ளது.

‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்திய விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடினார் இளையராஜா. அப்போது இசையுரிமை வைத்திருந்த நிறுவனத்திடம் இருந்து உரிமை வாங்கிவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் கூடுதல் வாதங்களுடன் இளையராஜா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இதனிடையே, இந்த மோதலைத் தொடர்ந்து தங்களது ஓடிடி தளத்தில் இருந்து ‘குட் பேட் அக்லி’ படத்தை நீக்கிவிட்டது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.

எப்போதும் சர்ச்சைக்குரிய மற்றும் பிரச்சினைக்குரிய படங்களை தங்களது ஓடிடி நிறுவனத்தில் இருந்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் நீக்கிவிடும். இதற்கு முன்னதாக நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் சர்ச்சையில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து அப்படத்தை நீக்கி பின் மறுதணிக்கை செய்து வெளியிட்டார்கள். ‘குட் பேட் அக்லி’ நீக்கப்பட்டது தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் சிக்கலை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து “எங்களது படத்தை ஓடிடியில் இருந்து நீக்கியுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியிட்ட பின் பாடல்களை பயன்படுத்த எப்படி தடை விதிக்க முடியும்? படத்தில் மாற்றங்கள் செய்தால் மீண்டும் தணிக்கை பெற வேண்டியிருக்கும்” என்று தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக செப்டம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இளையராஜாவுக்கு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், சிம்ரன், அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தார். இப்படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT