லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்வை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினியின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. வழக்கமாக ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்வுகளை யூடியூப் தளத்தில் பதிவேற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த முறை நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது.
அதன் படி வரும் ஆகஸ்ட் 10 அன்று காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அதே நாள் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் இந்த நிகழ்வு ஒளிப்பரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.