ஓடிடி தகவல்

ஓடிடியில் முன்கூட்டியே ‘தக் லைஃப்’ ரிலீஸ் - பின்னணி என்ன?

ஸ்டார்க்கர்

‘தக் லைஃப்’ படம் திட்டமிட்டதற்கு முன்னரே ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் 5-ம் தேதி வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று பெரும் தோல்வியை தழுவியது. தமிழ் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் இப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் இப்படத்தினை விளம்பரப்படுத்தவே பல கோடிகளை செலவு செய்துள்ளது படக்குழு.

இப்படத்தினை இந்தியில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியிட 8 வாரங்களுக்கு பின்னரே ஓடிடி வெளியீடு என்று முடிவு செய்து ஒப்பந்தம் போட்டது படக்குழு. இதனை மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பிலும் உறுதிப்படுத்தினார். தற்போது படம் பெரும் தோல்வியால் இப்படத்தினை முன்னரே ஓடிடியில் வெளியிட ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது.

முன்னரே வெளியிட்டால் இப்படத்துக்காக கொடுக்கப்பட்ட பெரும் தொகையில் கொஞ்சம் எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். இம்மாதிரியான முடிவுகளை எப்போதுமே இந்திப் படங்களுக்கு எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், நாசர், அபிராமி, த்ரிஷா, வடிவுக்கரசி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்தன.

SCROLL FOR NEXT