‘துடரும்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களின் வெற்றியால் புதிய முடிவை எடுத்திருக்கிறது ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம்.
தென்னிந்திய திரையுலகில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படங்கள் ‘டூரிஸ்ட் பேமிலி’ மற்றும் ‘துடரும்’. இந்த இரண்டு படங்களுமே இப்போது வரை திரையரங்குகளில் நல்ல வசூல் செய்து வருகிறது. குறிப்பாக ‘துடரும்’ திரைப்படம் கேரளாவில் மட்டுமே ரூ.100 கோடி வசூலை கடந்திருக்கிறது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலை கடந்திருக்கிறது.
இந்த இரண்டு படங்களின் ஓடிடி உரிமையினையும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. மே 21-ம் தேதி ‘துடரும்’ படமும், மே 28-ம் தேதி ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. ஆனால், திரையரங்கில் நல்ல வசூல் ஈட்டி வருவதால் இன்னும் சில வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்கள்.
இந்த வேண்டுகோளை ஏற்று ஜூன் முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியிட சம்மதம் தெரிவித்திருக்கிறது ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம். இதுபோல் ஓடிடி நிறுவனங்கள் சம்மதம் தெரிவிப்பது அரிது என்பதால், திரையுலகினர் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.