ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் ஏப்ரல் 24-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மோகன்லால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘எம்புரான்’. வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும், இப்படத்தின் காட்சிகள் பெரும் சர்ச்சையை உண்டாக்கின. இதனால் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு சுமார் 2 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டன. இது பெரும் விவாதப் பொருளானது.
தற்போது இப்படம் ஏப்ரல் 24-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பினை மோகன்லால் வெளியிட்டுள்ளார். ‘லூசிஃபர்’ படத்தின் 2-ம் பாகமாக இப்படம் உருவாக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘எம்புரான்’. இப்படத்தினை ஆசீர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்தது. ஆனால், இறுதியில் ஏற்பட்ட பணப் பிரச்சினையை தீர்த்து வைத்து இப்படத்தினை வெளியிட்டது கோகுலம் மூவிஸ்.