ஓடிடி தகவல்

ஓடிடியில் ‘குடும்பஸ்தன்’ மார்ச் 7-ல் ரிலீஸ்

ப்ரியா

திரையரங்குகளில் மகத்தான வரவேற்பை பெற்ற மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இம்மாதம் 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘குடும்பஸ்தன்’. சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைத்துள்ளார்.

‘குடும்பஸ்தன்’ திரைப்படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்குமே நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் வசூல் ரீதியிலான மாபெரும் வெற்றிப் படைப்பு இது என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஓடிடியில் இப்படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக, ‘குடும்பஸ்தன்’ மார்ச் 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் எப்படி? - காதலி வெண்ணிலாவை (சான்வே மேகனா) சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்கிறார் நவீன் (மணிகண்டன்). எதிர்ப்பு இருந்தாலும், நவீன் வீட்டிலேயே இருவருடைய வாழ்க்கையும் தொடங்குகிறது. தன்னை கேவலமாக நினைக்கும் அக்கா கணவர் ராஜேந்திரன் (குரு சோமசுந்தரம்) முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கும் நவீனுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலையால் திடீரென வேலை பறி போகிறது.

எனினும், குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் அவர், கடன் வாங்கி குவிக்கிறார். அது அவரை எங்கு கொண்டு நிறுத்துகிறது என்பதை கலகலப்பாகச் சொல்கிறது படம். இந்தக் காலத்துக்கேற்ற கதையை இயக்கி இருக்கிறார் ராஜேஷ்வர் காளிசாமி. வழக்கமான குடும்பக் கதைதான் என்றாலும் அந்தக் குடும்பத்தின் ஓட்டத்துக்காக நாயகன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை ஏராள நகைச்சுவையுடன் தாராளமாகக் கொடுத்திருக்கும் திரைக்கதைதான் படத்தின் ஆகப் பெரும் பலம்.

நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை எந்தவித சீரியஸ் தன்மையும் இன்றி முழுக்க முழுக்க ரகளையான விதத்தில் ஜாலியாக சொல்லப்பட்ட இந்த ‘குடும்பஸ்தன்’ படத்துக்கு ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிட்டும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளது.

SCROLL FOR NEXT