துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்து கவனம் ஈர்த்துள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த தெலுங்கு படம் ‘லக்கி பாஸ்கர்’. மீனாட்சி சவுத்ரி, ராம்கி முதலானோர் நடிப்பில் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ல் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘லக்கி பாஸ்கர்’, நெட்ப்ஃளிக்ஸ் டாப் 10 ட்ரெண்டிங்கில் தொடர்ச்சியாக 13 வாரங்கள் இடம்பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளதாக படக்குழு பெருமிதம் தெரிவித்துள்ளது.
படம் எப்படி? - பம்பாயில் வசிக்கும் பாஸ்கர் (துல்கர் சல்மான்), வங்கி ஒன்றின் காசாளர். இளம் மனைவி சுமதி (மீனாட்சி சவுத்ரி), மகன் கார்த்திக் (ரித்விக்), சகோதரி, சகோதரன் மற்றும் அப்பாவுடன் வசிக்கும் அவருக்குக் கடன் மேல் கடன். நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கும் அவர், தனக்கு புரமோஷன் கிடைக்கும் என நம்புகிறார். அது கிடைக்காமல் போக, நேர்மையை ஓரமாக வைத்துவிட்டு, வேறு முடிவை எடுக்கிறார். அது அவருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது. அதில் இருந்து மீண்டு சாதாரண பாஸ்கர், லக்கி பாஸ்கர் ஆனாரா என்பது படம்.
1992-ல் நடக்கிறது கதை. பங்குசந்தை மூலம் பல கோடிகளை அள்ளிய உண்மைச் சம்பவ நிதி மோசடியை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. அந்த மோசடிக்கு வங்கிகள் எப்படி துணையாக இருந்தன என்பதைப் பேசுகிறது இந்தப் படம். துல்கரின் வாய்ஸ் ஓவரில் தொடங்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம், தெளிவான திரைக்கதையோடு நம்மை ஈர்க்கிறது.
வங்கி ரசீது மூலம் நடக்கும் ஊழல்கள், வங்கிகளின் பெருந்தலைகள் நடத்தும் பண நாடகம், பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தின் பின்ன ணியில் கைமாறும் பகீர் மோசடிகள் என கொஞ்சம் சிக்கலான கதைதான் என்றாலும் அதைத் தெளிவாகச் சொன்ன விதத்தில் வெற்றி பெறுகிறது வெங்கி அட்லூரியின் டீம்.
‘வேகமா ஓடுற வண்டியும், வேகமா வர்ற பணமும் என்னைக்காவது ஒருநாள் கீழத் தள்ளிரும்’, ‘ஜெயிச்சுட்டு தோத்துப் போனா, தோல்விதான் ஞாபகம் இருக்கும். தோத்துட்டு ஜெயிச்சா அந்த வெற்றி சரித்திரத்துல நிற்கும்’, ‘ஒரு அரைமணி நேரம் நான் நினைச்சபடி நடக்கலைங்கறதுக்காக, வாழ்க்கையை வெறுத்திட முடியுமா?” என்பது போன்ற பல வசனங்கள் கவனிக்க வைப்பவை. முழு திரையனுபவம் தரும் இப்படம்தான் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.