உன்னி முகுந்தன் நடித்து, ஆக்ஷன் பேக்கேஜ் ஆக மலையாளத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த ‘மார்கோ’ திரைப்படம், பிப்ரவரி 14-ல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
‘மார்கோ’ 2024 இறுதியில் மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். இப்படத்தில் உன்னி முகுந்தன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹனிஃப் அதேனி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஆண்டு டிச.20-ல் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படம் மார்கோ (உன்னி முகுந்தன்) என்கிற கதாபாத்திரத்தை சுற்றி நடக்கிறது. அவனது அண்ணன் கொல்லப்பட்ட பிறகு, அக்கொலைக்கு தொடர்புடையவர்களை பழி வாங்க நினைக்கிறான். அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதால் அவர்களை தண்டிக்க வன்முறையை ஆயுதமாக கையில் எடுக்கிறான். பல தடைகளை தாண்டி, அவனது அண்ணனின் மரணம் குறித்த உண்மையை அறிந்து கொண்டு களமிறங்குவதே திரைக்கதை.
படம் முழுவதும் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் சில தரப்பினர் இப்படத்தை பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனினும், இந்த அதிரடியான ஆக்ஷன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. இப்படம், பிப்ரவரி 14-ல் சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.