ஓடிடி தகவல்

‘புஷ்பா 2’ ஓடிடி ரிலீஸ் ப்ளான் என்ன?

செல்வ சூர்யா

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா 2 - தி ரூல்’ கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

‘புஷ்பா’ முதல் பாகத்தில் சாதாரண கூலி தொழிலாளியாக இருந்து செம்மரக் கடத்தல் சிண்டிகேட்டின் தலைவனாக அல்லு அர்ஜுன் உயர்வது வரை கதை அமைக்கப்பட்டிருக்கும். செம்மரக் கடத்தலை தடுக்க வரும் எஸ்பி ஃபஹத் ஃபாசில் உடன் அல்லு அர்ஜுனுக்கு மோதல் தொடங்குவது வரை முதல் பாகத்தில் காட்டியிருப்பார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசில் மோதல் ஒரு புறம் இருக்க மாநிலத்தின் முதல்வரையே மாற்றும் சக்தியாக அல்லு அர்ஜுன் எப்படி மாறுகிறார் என்பதையே கதையாக வைத்து இருக்கிறார்கள்.

பாக்ஸ் ஆபீஸில் ரூ.1,700 கோடிக்கு மேல் குவித்து வசூல் சாதனை படைத்துள்ள இந்தப் படத்தின் ஒடிடி ரீலிஸ் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ஒடிடி ரீலிஸ் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.275 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக நெட்ஃப்ளிக்ஸ் தரப்பில் இன்ஸ்டா பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் இந்தி மொழியை தவிர்த்து தமிழ், தெலுங்கு,
மலையாளம், கன்னடம் மொழிகளில் விரைவில் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவிலும் எந்த தேதியில் ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடப்படவில்லை. ஜனவரி 30 அல்லது 31-ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, ‘புஷ்பா 2’ ரீலோடட் வெர்ஷனாக கூடுதல் காட்சிகளுடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது உறுதி.

SCROLL FOR NEXT