தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரின் வாக்குமூலங்களும், காவல் துறை ரியாக்ஷன்களையும் மையமாகக் கொண்ட ‘விடுதலை பாகம் 2’ ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் 2023-ல் வெளியானது. மகத்தான வெற்றி பெற்றதன் தொடர்ச்சியாக, ‘விடுதலை பாகம் 2’ திரையரங்குகளில் 2024 டிசம்பரில் வெளியானது. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர், பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், அனுராக் காஷ்யப் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
விமர்சன ரீதியில் மிகச் சிறப்பான வரவேற்பையும், வர்த்தக ரீதியில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்ற ‘விடுதலை பாகம் 2’ இப்போது அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள், திரையரங்குகளில் பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை ஆழமாக ‘நோக்கும்’ தீவிர ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமையும் இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த விரைவுப் பார்வை இது...
கடைநிலைக் காவலர் குமரேசனால் (சூரி) கைது செய்யப்படும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி), மலைக்காட்டு வழியாக போலீஸ் படை வேறு இடத்துக்கு அழைத்துச் செல்கிறது. போகும் வழியில் பெருமாள் வாத்தியார், தன் காதல் கதையையும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, தான் உருவெடுத்த கதையையும் சொல்கிறார்.
இன்னொரு புறம் அவரது கைதை வைத்து அதிகாரவர்க்கம் வேறுவிதமாகத் திட்டம் போடுகிறது. அதே நேரத்தில் பெருமாள் வாத்தியாரை மீட்க அவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸுடன் மோதலில் ஈடுபடுகின்றனர். இதில் பெருமாள் வாத்தியார் தப்பித்தாரா, இல்லையா என்பதுதான் திரைக்கதை.
‘விடுதலை’ முதல் பாகத்தில் மலைக் கிராமத்தில் சுரங்கம் தோண்டும் கார்ப்பரேட்களின் பின்னணியில் அரசியல், அதிகாரவர்க்கம் இருப்பதையும், தேடுதல் வேட்டை என்கிற பெயரில் எளிய மக்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்துவிடும் அரச பயங்கரவாதத்தையும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் மக்கள் தலைவராக உயரும் விஜய் சேதுபதியின் கதை மொழிக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
இரவில் வழி தெரியாமல் சுற்றும் போலீஸாருக்கு வழி சொல்லியபடியே விஜய் சேதுபதி தன் கதையை சொல்வது சுவாரஸ்யமான உத்தி. அந்தக் காலகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழும் போராளிகள் திரையரங்கில் சந்தித்துக் கொள்வது, சங்கேத மொழிகளில் தகவல்கள் பரிமாறிக் கொள்வது, பீரியட் படத்துக்குரிய அம்சங்களுக்கேற்ப வைக்கப்பட்ட காட்சிகள் வெகுவாக ஈர்க்கும். ‘வழிநடத்த தலைவர்கள் தேவையில்லை; தத்துவம்தான் தேவை’ போன்ற சுளீர் வசனங்கள் உண்டு.
வெற்றி மாறனின் தத்துவார்த்த அரசியலை ஆழமாகப் பேசும் ‘விடுதலை பாகம் 2’ படத்தில் இடம்பெறும் சாதி, வர்க்கம், உழைப்புக்கேற்ற ஊதியம், வளக் கொள்ளை, மனித உரிமை மீறல்கள், அரசு நடவடிக்கை, காவல் துறை அராஜகம் சம்பவங்கள் அனைத்துமே இன்றும்கூட நாம் ஊடகங்களில் கடந்து செல்லும் செய்திகள்தான். அதேவேளையில், இந்தப் படம் பல இயக்கவாதிகளின் சதைகளும் ரத்தமும் மறைந்திருப்பதை உரக்கப் பேசியிருக்கிறது.