சித்தார்த் - ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ள ரொமான்டிக் திரைப்படமான ‘மிஸ் யூ’ இப்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் அடுத்து இயக்கிய படம்தான் ‘மிஸ் யூ’. இதில் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ளார். ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் டிசம்பரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ வில் வெளியாகியுள்ளது.
படம் எப்படி? - சினிமாவில் இயக்குநர் ஆவதற்கான முயற்சியில் இருக்கும் வாசுவை (சித்தார்த்), அரசியல்வாதி சிங்கராயரின் (சரத் லோகித்சவா) ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வெளியூர் செல்ல நினைக்கும் அவருக்கு வழியில் அறிமுகமாகிறார், பெங்களூரில் காபி ஷாப் வைத்திருக்கும் பாபி (கருணாகரன்), அவருடன் பெங்களூரு செல்கிறார்.
அங்கே நாயகி சுப்புலட்சுமியை (ஆஷிகா ரங்கநாத்) கண்டதும் காதல் வருகிறது வாசுவுக்கு. திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்க, மறுக்கிறார் அவர். ஒருவேளை பெற்றோர் பேசினால் சரியாக இருக்கும் என நினைத்து, வீட்டில் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டுகிறார் வாசு, அதிர்ச்சி அடையும் அவர்கள் அந்த பெண், வேண்டவே வேண்டாம் என்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? அரசியல்வாதியின் ஆட்கள் ஏன் வாசுவைத் தேடுகிறார்கள் என்பது மீதி கதை.
வழிய வழிய காதல், உதவும் நண்பர்கள், கல்யாணம், அது தொடர்பான கலாட்டா என்கிற வழக்கமான ‘ரொமான்டிக் டிராமா’ படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசத்தைத் தருகிறது, ‘மிஸ் யூ’. அதற்கேற்ப சஸ்பென்ஸ், திருப்பங்கள் என ஆச்சரியங்களுடன் செல்கிறது.
வாசுவுக்கும் சுப்புலட்சுமிக்குமான சிக்கல்கள், அதன் வழி அவர்கள் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என இவர்கள் கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதம் சிறப்பாக இருக்கின்றன. அசோக்கின் வசனங்கள் பல இடங்களில் கவனிக்க வைக்கின்றன. விடுமுறைக் காலத்தில் நேரம் கிடைப்போருக்கு ஏமாற்றம் தராத விருந்தாக ‘மிஸ் யூ’ அமையக் கூடும். படத்தை ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணலாம்.