2018-ல் வெளியாகி நெட்ஃபிளிக்ஸில் ஹிட்டடித்த ‘சேக்ரட் கேம்ஸ்’ (Sacred Games) படைப்புக் குழுவின் அடுத்த ஆக்கமான ‘ப்ளாக் வாரன்ட்’ வெப் சீரிஸ் இப்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
விக்ரமாதித்யா மோத்வானி, சத்யன்ஷு சிங் உருவாக்கத்தில், முழுக்க முழுக்க திஹார் சிறையின் குற்றப் பின்புலக் கதைகளை மையப்படுத்தி வெளியாகியுள்ள ‘ப்ளாக் வாரன்ட்’ வெப் சீரிஸ் குறித்து எக்ஸ் தளத்தில் பாசிட்டிவ் ரிவ்யூக்களை அள்ளித் தெளித்து வருகின்றனர் நெட்டிசன்கள். சுனேத்ரா சவுத்ரி எழுதிய புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த வெப் சீரிஸில் முதன்மைக் கதாபாத்திரமான திஹார் சிறையின் ஜெயிலராக சசிகபூரின் பேரன் ஜாஹன் கபூர் நடித்துள்ளார்.
80-களின் பின்புலத்தில் திஹார் சிறையே முழு கதைக்களமும். ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்பாக நகர்வதாகவும், ஜாஹன் கபூர் தனது நடிப்பால் மிரட்டி உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
திஹார் சிறையின் மறுபக்கத்தைக் காட்டும் இந்த க்ரைம் த்ரில்லர் வகை வெப் சீரிஸ் நிச்சயம் ஒரே மூச்சில் எல்லா எபிசோடுகளையும் பார்த்து முடிக்கச் செய்யும் வகையில் விறுவிறுப்பு நிறைந்தது என்றே பலரும் கருத்துப் பதிவு செய்து வருகின்றனர். ‘சேக்ரட் கேம்ஸ்’ வெப் சீரிஸ் பேசிய அரசியல் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ‘ப்ளாக் வாரன்ட்’ திஹார் சிறைக் கதைகளுடன் சலசலப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
நெட்ஃப்ளிக்ஸுக்கு இந்த ஆண்டின் முதல் வின்னர் ‘ப்ளாக் வாரன்ட்’, சீரிஸை ஆரம்பித்தால் முடிக்காமல் தூக்கம் வராது, சசிகபூர் பேரன் ஜாஹன் கபூர் ஒரு ‘ஸ்டெல்லர்’ ஆக மிரட்டியிருக்கிறார் என்றெல்லாம் ஒவ்வொரு எபிசோடையும் நிறைவு செய்த கையோடு நெட்டிசன்கள் பலரும் குவிக் ரிவ்யூ செய்து வருகின்றனர்.