மதுரை: சொர்க்கவாசல் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை கோரிய மனுவை தணிக்கை வாரியம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமங்கலம் பரத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, கருணாஸ் நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படம் கடந்த நவம்பரில் வெளியானது. இப்படத்தில் கட்டபொம்மன் என்ற சிறைத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்துள்ளார். அவர் மது, போதைப் பொருள் விற்பனை செய்யும் காட்சிகள் உள்ளன. இது கட்டபொம்மன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் மரியாதை குறைவு ஏற்படும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு விடுதலைப் போராட்ட வீரர் கட்டபொம்மன் பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், சொக்கவாசல் திரைப்படத்தில் தவறான செயல்களை செய்யும் கதாபாத்திரத்துக்கு கட்டபொம்மன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எனவே சொர்க்கவாசல் திரைப்படத்தை ஓடிடி, நெட்பிலிக்ஸ், அமேசான் தளங்களில் வெளியிட தடை விதித்து, தவறான செயல்களை செய்யும் கதாபாத்திரத்துக்கு கட்டபொம்மன் பெயரை சூட்டிய சொர்க்கவாசல் திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டிமரிய கிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தணிக்கை வாரியம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.