ஓடிடி தகவல்

வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக ஷாருக் மகன் ஆர்யன் கான் அறிமுகம்

செய்திப்பிரிவு

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். இதன் மூலம் அவர் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

திரைத்துறையை பின்னணியாக கொண்ட கதைக்களத்துடன் இயக்குநராக களமிறங்குகிறார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். இந்த தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதனை ஷாருக்கான் தனது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இது தொடர்பான நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நெட்ஃப்ளிக்ஸுடன் இணைந்து புதிய தொடரை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஆர்யன் கானின் தனித்துவமான கதை. இது முழுமையான பொழுதுபோக்கு தொடராக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் நடிகை மோனா சிங் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் திரையுலகைச் சுற்றி நடக்கும் கதை என்பதால், ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானை பொறுத்தவரை அவர் நடிப்பில் அடுத்ததாக ‘கிங்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அவரது மகள் சுஹானா கான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT