ஓடிடி தகவல்

வெப் தொடர் ஆகிறது லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கை கதை!

செய்திப்பிரிவு

பஞ்சாபைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய். கொலை, ஆள்கடத்தல், பணம் பறிப்பு என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், இப்போது குஜராத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகள் மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானில் அரியவகை மான் ஒன்றை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் மீது குற்றம்சாட்டப்பட்டது. அந்த மான் வகையை பிஷ்னோய் இன மக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். அதனால் சல்மான் கான் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இல்லை என்றால் கொல்லப்படுவார் என்று லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டல் விடுத்துள்ளார்.

அவரது கூட்டாளிகள், சல்மான் கான் வீட்டில் சில மாதங்களுக்கு முன் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சல்மானின் நெருங்கிய நண்பரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கை கதை வெப் தொடராகிறது. நொய்டாவை சேர்ந்த அமித் ஜானி என்பவர், தனது ஜானி ஃபயர்பாக்ஸ் பிலிம் புரொடக்ஷன்ஸ் ஹவுஸ் சார்பில் இதைத் தயாரிக்கிறார். 'லாரன்ஸ் - எ கேங்ஸ்டர் ஸ்டோரி என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பற்றிய விவரங்கள் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT