மும்பை: நவாசுத்தீன் சித்திக் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஹத்தி’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
புதுமுக இயக்குநர் அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள படம் ‘ஹத்தி’ (Haddi). இதில் நவாசுத்தீன் சித்திக் மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் இளா அருண், முஹம்மது ஜீஷான் அய்யூப், விபின் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் அக்ஷத் அஜய் சர்மா கூறும்போது, “இது சமூகத்தின் இரக்கமற்ற தன்மையை எடுத்துக் காட்டுகிறது. இப்படத்தை உருவாக்கவும், கதாபாத்திரங்களை வடிவமைக்கவும் எனக்கு நிறைய நாட்கள் ஆனது. 'ஹத்தி' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.