மும்பை: பிரபல இந்தி நடிகையான சுஷ்மிதா சென், தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பிறகு இந்திப் படங்களில் நடித்து வரும் அவர், இப்போது பிரபல திருநங்கை செயற்பாட்டாளர் ஸ்ரீகவுரி சாவந்த் வாழ்க்கைக் கதையில் நடிக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த ஸ்ரீகவுரி சாவந்த் திருநங்கைகளுக்காகக் குரல் கொடுத்து வருபவர். அவர்களின் உரிமைகளுக்காக, பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார். அவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தாலி (Taali) என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது.
இதில் ஸ்ரீகவுரி சாவந்தாக சுஷ்மிதா சென் நடிக்கிறார். படத்தைத் தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கி உள்ளார். இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம், ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஆக.15-ம் தேதி வெளியாகிறது.