அமேசான் பிரைமில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெப் தொடர் ‘மிர்சாபூர்’. பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி சர்மா, ரசிகா துகல் உட்பட பலர் நடித்திருந்தனர். 2018-ல் வெளியான இத் தொடரை கரண் அன்ஸுமான், குர்மீத் சிங் இருவரும் இயக்கியிருந்தனர். இத்தொடர், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2-வது சீசனில், விஜய்வர்மா, இஷா தல்வார் , லில்லிபுட், அஞ்சும் ஷர்மா உட்பட பலர் இணைந்திருந்தனர். 2020ம் ஆண்டு வெளியான இந்த தொடரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் மூன்றாவது சீசன் இப்போது உருவாகி இருக்கிறது.
இந்த வருடம் வெளியாக இருக்கும் இதன் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில் நடித்துள்ள இஷா தல்வார் கூறும்போது, “இதில், ‘பவர்கேம்’ ஆடுபவராக என் கேரக்டர் இருக்கும். இந்தப் பழிவாங்கும் அரசியல் கதையில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. இந்த 3-வது சீசனை உற்சாகமாக எதிர்பார்க்கிறேன். உணர்ச்சிகரமான ஒரு சிறந்த டிராமவை இதில் பார்க்க முடியும்” என்றார். இஷா தல்வார் தமிழில் ‘தில்லு முல்லு’, ‘ரன் பேபி ரன்’ படங்களில் நடித்துள்ளார்.