எ
ந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் வரக்கூடியது தலைவலி. இன்னதுதான் காரணம் என்று இல்லாமல், அன்றாடம் நம்மை பாதிக்கிற சின்னச் சின்ன விஷயங்கள்கூட தலைவலியை ஏற்படுத்தலாம். தலைவலி வருவதற்கான காரணம் சிறியதாக இருக்கலாம்; ஆனால் ஒருபோதும் தலைவலியை சிறிய விஷயமாக அலட்சியப்படுத்தக் கூடாது.
மனித மூளை சுமார் 1,400 கோடி நரம்பு செல்களால் ஆனது. மூளையும், தண்டுவடமும் சேர்ந்ததுதான் மூளையின் நரம்பு மண்டலம். மனித மூளையானது மெனின்ஜெஸ் எனப்படும் மூன்றடுக்கு உறைகளால் பாதுகாக்கப்படுகிறது. முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று இதை 3 பகுதிகளாகப் பிரிக்கலாம். மூளையானது கபாலத்துக்குள் மூளை தண்டுவட திரவத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மூளைக்கு சர்க்கரையும், ஆக்சிஜனும்தான் உணவு. இவை தங்குதடையின்றி கிடைத்துவிட்டால், தலைவலி இருக்காது. அதில் சிறிது குறைபாடு இருந்தாலும் தலைவலி வருவதற்கு வாய்ப்பு அதிகம். தலைவலி வரும்போது பின் மண்டை, தோள்பட்டை, கழுத்து, கை, முதுகின் மேல்புறம் ஆகிய பகுதி கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
ட்ரைஜீமினல் நியூரான் (Trigeminal Neurons) எனப்படும் மூளை நரம்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் தலைவலி வருவதற்கான காரணம். கருவானது தாயின் வயிற்றில் இருக்கும்போதே நியூரான்கள் உருவாக ஆரம்பித்துவிடும். கரு உருவான 90 நாட்களில் ஒரு விநாடிக்கு 2,500 என்கிற விகிதத்தில், 240 கோடி நியூரான்கள் உருவாகிவிடும். இந்த மூளை நரம்புகள்தான் நம்மை இயக்குகின்றன. இவற்றில் தகவல் மற்றும் உணர்வு பரிமாற்றத்தில் பாதிப்பு ஏற்படும்போது, பிரச்சினைகள் தோன்றுகின்றன.
அகில உலக தலைவலி கழகத்தின் தகவல்படி, தலைவலி யில் பல வகைகள் உள்ளன. மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, சைனஸ் தலைவலி, விபத்துகளுக்குப் பிறகு ஏற்படும் (post traumatic) வலி, வாஸ்குலர் வலி, சாப்பிடும் பொருளால் ஏற்படும் வலி, தொற்றுகளால் ஏற்படும் வலி, கண், காது, மூக்கு, வாய் போன்றவற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினையால் வரும் வலி, டென்ஷனால் வரும் வலி என பலவகை உள்ளது. இதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடி யது மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலி. இந்த வலி வரும்போது, வயிற்றுப் பிரட்டல், வாந்தி, அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை, தலையை சுத்தியலால் அடிப்பது போன்ற வலி ஏற்படும்.
காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். நமக்கு தலைவலி எதனால், எப்போதெல்லாம் வருகிறது என்பதை சாதாரண சில சுய பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளலாம். யோகாப் பயிற்சிகள் மூலம் தலைவலியை முற்றிலும் குணப்படுத்த முடியும். உடலுக்கு யோகாப் பயிற்சியும், மனதுக்கு தியானப் பயிற்சியும் மிகவும் அவசியம். யோகாசனங்கள் செய்யும்போது, மனம் அமைதியாவதுடன், கோபம், வெறுப்பு, எரிச்சல், பதற்றம் ஆகியவற்றில் இருந்தும் விடுபடலாம். தினமும் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, யோகாப் பயிற்சிகள் செய்வது நல்லது. 10-15 நிமிடம் தியானம் செய்ய வேண்டும்.
ஆசனங்களில் சஷங்காசனம், சஷங்க புஜங்காசனம், யோகா முத்ரா, தாடாசனம், திரிகோணாசனம் மிகவும் நல்லது. பிராணாயாமத்தில் நாடிசோதனம், ப்ரம்மரி, உஜ்ஜயி ஆகியவை பலன் தரும். ஷட்கர்மாவில் நேத்தி மிகவும் நல்லது. தலைவலியின் போது, யோக நித்ரா செய்ய, நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சஷங்கம் என்றால் முயல். யோகா விரிப்பில் படுத்துக்கொண்டு 10-15 முறை மூச்சை நன்கு இழுத்து விடவேண்டும். மெதுவாக இரு கால்களையும் மடித்துக்கொண்டு வஜ்ராசனத்தில் உட்கார வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு, மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டே மெதுவாக குனிந்து, மூக்கு முட்டிக்கு நடுவே இருப்பதுபோல வைத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு மேலே கைகளை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில், தலைக்கு அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து, தலைவலி சீக்கிரம் குணமாகும். இந்த ஆசனம் செய்யும்போது சிலருக்கு தலை கனமாக இருப்பதுபோல இருக்கும். ஆனால், சிறிது நேரத்தில், தலைவலி குறைவதை நன்கு உணர முடியும்.
சஷங்காசனத்தில் படுத்துக்கொண்டு மெதுவாக தலையை முன்னால் கொண்டுவந்து, கைககளை பக்கவாட்டில் ஊன்றியபடி, தலையை நன்றாக உயர்த்த வேண்டும். இந்த ஆசனம் செய்வதாலும் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சுகாசனம், அர்த்த பத்மாசனம், பத்மாசனம் இந்த மூன்றில் எது சுலபமோ, அந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, கைகளைப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை இழுத்தவாறு தலையை பின்னால் சாய்த்து கூரையைப் பார்க்கவும். பிறகு மூச்சை மெதுவாக விட்டவாறு முன்னால் குனிந்து, இரு கால் முட்டிகளுக்கு இடையே மூக்கு இருக்குமாறு வைக்க வேண்டும். அவ்வாறு வைக்க முடியாவிட்டால், கீழே தலையணையை வைத்து, அதன்மீது மூக்கை வைத்து, 5-7 முறை மெதுவாக மூச்சை இழுத்து விட வேண்டும். இப்படி செய்வதால் தலைக்கு அதிக அளவு ரத்த ஓட்டம் சென்று தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இதுபோல 3-5 முறை செய்யலாம்.
சவாசனத்தில் யோக நித்ரா செய்யும்போதும், தலைவலி சரியாவதை உணர முடியும். யோகப் பயிற்சியோடு, சரியான நேரத்தில் தூக்கம், சமச்சீரான சத்தான உணவு, நேர நிர்வாகம் ஆகியவற்றையும் கடைபிடித்தால், நோய்கள், வலியில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
- யோகம் வரும்...
எழுத்து: ப.கோமதி சுரேஷ்
படங்கள்: எல்.சீனிவாசன்