நமது நாட்டில் ஒரு குறிப்பிட்ட நோயைப் பற்றியும், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அணுகுவதைப் பற்றியும் பொதுமக்கள் யாரும் புரிந்துக்கொள்வதுமில்லை, புரிந்துக்கொள்ள முயற்சிப்பதுமில்லை. சமீபத்தில் தெற்கு கோவாவில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம்.
சமீபத்தில் அங்கு ரிவோனா என்ற பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் எச்.ஐ.வி. பாதித்த 13 மாணவர்களை வெளியேற்றுமாறு மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால், அப்பள்ளி நிர்வாகம் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, அந்த மாணவர்களுடன் தங்கியிருக்கும் 23 பேரையும் வெளியேற்றவேண்டும் என்றும் அப்பெற்றோர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இத்தகைய செயல்களை தவிர்க்க உச்ச நீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்தபோதும், பல அரசு சாரா நிறுவனங்கள் ஒருசில முயற்சிகள் எடுத்தபோதிலும், பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.
இது குறித்து நஸ் ஃபவுண்டேஷன் இந்தியா ட்ரஸ்ட் (Naz Foundation India Trust) என்ற அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஞ்சலி கோபாலன் பேசுகையில், “இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க, கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும். அதைவிடுத்து, பொதுமக்கள் தாமாக சில நிபந்தனைகளை விதிக்க முடியாது”, என்று தெரிவித்தார்.
எச்.ஐ.வி. பாதித்த மாணவர்களின் பள்ளி சேர்க்கையை ரத்து செய்ய கோரியும், அப்படி செய்யாவிடில் தாங்கள் அப்பள்ளியை புறக்கணிப்போம் என்றும் பெற்றோர்கள் தெரிவித்தாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2009-ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவிலுள்ள லதூர் பகுதியில் இதே போன்று ஒரு பிரச்சினை எழுந்தபோது, அவரது தொண்டு நிறுவனம் உள்ளிட்ட மூன்று அரசு சாரா நிறுவனங்கள் அதற்கு தீர்வு கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.