‘எங்களுக்கான அதிகபட்ச ஆசை எதுவும் கிடையாது. இயலாதவர்களுக்கு எங்களின் உதவி தேவைப்படும் வரை இந்த நிறுவனம் இருக்கும். அதன் பிறகு கலைத்து விடுவோம்’ என்கிறார் ‘ஸீட்’ (SEED) நிறுவனத்தின் கார்த்திக் பாரதி.
நிறுவனம் சிறியதாக இருந்தாலும் இவர்களின் சேவை பெரியது. மதுரை கரும்பாலை ஏரியா என்பது, கட்டிடத் தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வீட்டு வேலையாட்கள் என உடல் உழைப் பாளிகளை உள்ளடக்கிய பகுதி. இங்கு வசிப்பவர்களின் குழந்தை களை பள்ளிக்கு படிக்க அனுப்பு வதே பெரிய காரியம் என்ற நிலையை மாற்றி, இப்போது இங்கே பிஹெச்.டி. மாணவர்கள் வரை உருவாகி இருக்கிறார்கள். இதற்கு மூலகாரணம் கார்த்திக் பாரதி.
இவரும் ஒரு கட்டிடத் தொழிலாளியின் மகன்தான். பகுதி நேரமாய் வேலை பார்த்துக் கொண்டே பள்ளிப் படிப்பை முடித்தவர், 1989-களில் அறிவொளி இயக்கத் தொண்டராக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பட்டப் படிப்புக்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அடி எடுத்து வைத்ததும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் 40 பேரை சேர்த்துக் கொண்டு கரும்பாலை ஏரியாவில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை நேர பயிற்சி வகுப்பு நடத்த ஆரம்பித்தார் கார்த்திக் பாரதி. கல்லூரிப் படிப்பை முடித்தபோது ‘சிறந்த என்.எஸ்.எஸ். தன்னார் வலர்’என்ற விருதை இவருக்கு வழங்கியது தமிழக அரசு.
கல்லூரிப் படிப்பை கார்த்திக் முடித்துவிட்டதால், தொடர்ந்து மாலை நேரப் பயிற்சி வகுப்பு நடக்குமா என்ற கேள்வி குழந்தை களிடையே எழுந்தது. அப்புறம் என்ன நடந்தது? அதை கார்த்திக் பாரதியே விவரிக்கிறார்..
பல வருடங்களாக இந்தக் குழந் தைகளோடு இருந்ததால், படிப்பை முடித்ததும் அவர்களை அப்படியே விட்டுவிட்டுப் போக மனமில்லை. இந்தக் குழந்தைகள் எல்லாருமே அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள். இவர்களுக்கு தகுந்த கல்விச் சூழலை உருவாக்குவதற்காகவும் படிப்புடன் வாழ்வியல் கல்வியை கொடுப்பதற்காகவும் ‘ஸீட்’ என்ற அமைப்பை தொடங்கினோம்.
ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்காக ‘வாண்டுகள் அரங்கம்’, 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்காக ‘வேர்கள் அரங்கம்’, 9 முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்களுக்காக ‘கனவுகள் அரங்கம்’, கல்லூரி மாணவர் களுக்காக ‘தேடல் அரங்கம்’ என கரும்பாலையில் நான்கு மையங்களை உருவாக்கினோம். இந்த மையங்களில் இப்போது 200 பேர் படிக்கின்றனர். இவர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக 25 தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.
இங்கே படிப்பவர்கள் பிளஸ் 2 முடித்ததும் அவர்களும் தன்னார் வலர்களாக மாறிவிடுவர். இவர் களுக்குள் ‘குழந்தைகள் பேரவை’ என்ற அமைப்பு இருக்கிறது. வார இறுதியில் பேரவைக் குழந்தைகள் கூடிப் பேசி விவாதம் நடத்துவர். முடிவில், நாங்கள் என்ன செய்ய வேண்டும், அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என அறிக்கை தருவார்கள். மேலும் தங்களது எண்ணங்களை பிரதிபலிப்பதற்காக ‘புதுயுகம்’ என்ற ஆண்டு இதழையும் நடத்துகிறார்கள்.
இவர்களிடம் சேமிப்புப் பழக் கத்தை ஊக்குவிப்பதற்காக ’தேன் கூடு குழந்தைகள் வங்கி’ என்ற வங்கியை வைத்திருக்கிறோம். தங்களுக்குக் கிடைக்கும் பாக்கெட் மணியை இந்த வங்கியில் செலுத்து வார்கள். வருடக் கடைசியில் 20 சதவீத வட்டியுடன் அதை அவர்களுக்கு திருப்பிக் கொடுப் போம். அதைக் கொண்டு அடுத்த ஆண்டுக்கான படிப்புச் செலவுகளை பார்த்துக் கொள்வார்கள். இது மட்டுமல்லாமல் கலை, மருத்துவம், விளையாட்டு என்று தனித்தனியாக கிளப்களையும் வைத்திருக்கிறோம்.
இவற்றின் மூலம் தனியார் பள்ளிகளில் கொடுக்கப்படும் அத்தனை பயிற்சிகளையும் இந்தக் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் இந்தப் பணிகளுக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. எங்கள் கரும்பாலை பகுதியிலிருந்து 25 ஆசிரியர்கள், 3 வக்கீல்கள், 20 பொறியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். நிறைய பேர் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த ஆண்டு முதல் முறையாக 2 பேர் பிஹெச்.டி. பண்ணுகிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே முதல் தலை முறை பட்டதாரிகள் என்பது முக்கிய மான விஷயம்.. பெருமிதத்துடன் சொன்னார் கார்த்திக் பாரதி.