மற்றவை

மறுவாழ்வு வழிகாட்டுதல் மையங்கள் மூடப்படும் அபாயம்: குறைபாடுள்ள குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மறுவாழ்வு வழிகாட்டுதல் மையங்களுக்கான நிதி உதவி நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், வளர்ச்சித் தடையுள்ள குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆட்டிசம், மூளை வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம் போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள், வளர்ச்சித் தடையுள்ள குழந்தைகளாகக் கருதப்படுகின்றனர். வளர்ச்சித் தடை ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல. இதைச் சரியான காலத்தில் அடையாளம் காணாவிட்டால் எதிர்காலம் வீணாகிவிடும். தாமத திருமணம், உறவு முறையில் திருமணம், மரபு ரீதியான குறைபாடுகள் இருப்பவர்கள், ஆரோக்கியமில்லாத கர்ப்பிணிகளுக்கு இதுபோன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது.

வளர்ச்சித் தடையுள்ள இந்தக் குழந்தைகளுக்கு கை, கால்கள் செயல்படுவதில் பாதிப்பு, பிறர் சொல்வதை புரிந்துகொள்வது மற்றும் பேசுவதில் பிரச்சினை, சுய பராமரிப்பு செய்துகொள்வதில் தாமதம், கண் பார்வை குறைபாடு போன்றவை இருக்கும். இதை உரிய நேரத்தில் கவனிக்காவிட்டால், அந்த குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

நாட்டில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இந்த வளர்ச்சித் தடையுள்ள குழந்தைகள் பற்றிய முறையான கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படாததால் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. மேலும், இந்த குழந்தைகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளும் போதுமான அளவில் இல்லை.

கடந்த 2010-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த வள்ளலார், அவரது தனிப்பட்ட முயற்சியில் மருத்துவர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எஸ்எஸ்ஏ சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து வளர்ச்சித் தடையுள்ள குழந்தைகள் கணக்கெடுப்பை மேற்கொண்டார். அப்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் 620 வளர்ச்சித் தடையுள்ள குழந்தைகள் இருப்பதாகத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இக்குழந்தைகளுக்கு உரிய பயிற்சி மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேசிய ஊரக நலச்சங்கத்தின் நிதியுதவியுடன், தன்னார்வ நிறுவனம் சார்பில் வளர்ச்சித் தடையுள்ள குழந்தைகளுக்கான மறுவாழ்வு பயிற்சித் திட்டம், முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் 2012-ம் ஆண்டு ஜன. 13-ம் தேதி தொடங்கப்பட்டது. ரூ.2 கோடியில் 5 இடங்களில் குழந்தைகள் வழிகாட்டுதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த மையங்களுக்கு குழந்தைகளை அழைத்துவர இலவச பஸ் வசதியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஏற்படுத்திக் கொடுத்தது. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மனநல உளவியல் மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு தசைப்பயிற்சி, பேச்சுப் பயிற்சி, சிறப்பு கல்வி, அறிவுத்திறன் மதிப்பீடு செய்தல், அவர்களின் பெற்றோர்களுக்கு சமூக நலப்பணியாளர்கள் மூலம் ஆலோசனை வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழிகாட்டுதல் மையங்களில் பயிற்சி பெற்று குணமடைந்த 125 குழந்தைகள், தற்போது வழக்கமான குழந்தைகள் படிக்கும் சாதாரணப் பள்ளிகளில் படிக்கின்றனர்.

தற்போது இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்படவுள்ளாகவும், அதனால் வழிகாட்டுதல் மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

எஸ்எஸ்ஏ மூலம் நடத்த திட்டமா?

இதுகுறித்து வழிகாட்டுதல் மைய சமூகப் பணியாளர் ஒருவரிடம் கேட்டபோது, “அரசு மருத்துவமனைகளில் ஆலோசனைகள், மருந்து மாத்திரைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. முறையான பயிற்சி அளிப்பதற்கான தொழில்முறை பயிற்சியாளர், உளவியல் நிபுணர், சமூக மனநல பணியாளர், உபகரணங்கள் இல்லாததால் இக்குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளதாக வாய்மொழி உத்தரவு வந்துள்ளது. அதனால், இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதல் மையங்கள் மூடப்படும் வாய்ப்பு உள்ளதால் கிராமப் புறங்களில் வளர்ச்சித் தடையுடன் பிறக்கும் குழந்தைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) மூலம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என தெரியவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT