மற்றவை

ஆன்லைன் விற்பனையால் வாழ்வாதாரம் இழக்கும் புத்தக கடைக்காரர்கள்

ஆர்.கிருஷ்ணகுமார்

பதிப்பகங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி விற்பனை செய்துவருகின்றனர் புத்தக கடைக்காரர்கள். கே.ஜி. முதல் பொறியியல், மருத்துவம் என அனைத்து வகையான பாடப் புத்தகங்கள், கைடுகள், நாவல், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, சமையல் குறிப்புகள், ஆன்மிகம், மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு வகையான புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் புத்தகங்கள் ஆகியவற்றையும், பழைய புத்தகங்களையும் விற்கின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகக் கடைக்காரர்களை நம்பி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறும் புத்தக விற்பனை, இவர்களது வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த புத்தக விற்பனையாளர் ஏ.முகமது முஸ்தபா கூறியதாவது: ஆன்லைன் நிறுவனங்களின் நியாயமற்ற வர்த்தகம், எங்களது வாழ்வை புரட்டிப் போட்டுள்ளது. சில ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், 50 சதவீதத்துக்கும் மேலாக தள்ளுபடி வழங்குவதாகக் கூறி, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. ஆனால், கடைக்காரர்களால் அதிகபட்சம் 25 முதல் 30 சதவீதம்தான் தள்ளுபடி வழங்க முடியும். ஆன்லைன் நிறுவனங்கள் பதிப்பகங்களைத் தொடர்புகொண்டு, ஒட்டுமொத்தமாக புத்தகங்களை வாங்கி விற்கின்றன. இதனால், 60 சதவீத அளவுக்கு தள்ளுபடி வழங்க முடிகிறது.

சில நிறுவனங்கள் புத்தகங்களின் விலையை உயர்த்தி, குறிப்பிட்ட அளவு தள்ளுபடி தருவதாகக் கூறி ஏமாற்றுகின்றன. புத்தகங்களுக்கு அதிக தள்ளுபடியைக் கொடுத்துவிட்டு, ‘டெலிவிரி சார்ஜ்’ என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கின்றன. இவற்றால் கடைகளில் விற்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதம் குறைந்துவிட்டது. பல புத்தக நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைப் போக்க, புத்தகங்களுக்கான விற்பனை விலையைக் கட்டுப்படுத்தவும், நியாயமற்ற விற்பனையைத் தடை செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்றார்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள புத்தகச் சந்தையில் கடை நடத்தி வரும் ஜாபர் கூறும்போது, “கோவை நகரில் 150-க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள் இருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுவிட்டன. இந்தத் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாததாலும், புத்தகங்கள் மீதான ஆர்வத்தாலும் இத்தொழிலை விட்டுப் பிரியாமல்இருக்கிறோம்.

முன்பெல்லாம் விடுமுறை, சீசன் நாட்களில் உக்கடம் சந்தைக்கு 1,000 பேர் வரை வருவார்கள். இப்போது, 50 பேர் வந்தாலே அதிசயம். புத்தகத் தேக்கமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அன்றாடசெலவுக்கே பணம் கிடைக்காமல் திண்டாடுகிறோம். முன்பு, சென்னையில் புத்தக விற்பனையாளர்கள் 120 பேருக்கும் மேல் இருந்தார்கள். இப்போதோ 4, 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். நாங்கள் வாங்கும் விலையில், 5 சதவீதம் லாபம் வைத்துதான் புத்தகங்களை விற்க வேண்டியுள்ளது. இருந்தபோதிலும், புத்தகங்கள் விற்பனையாவதில்லை. பண மதிப்பு நீக்கம் பிரச்சினைக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. செய்வதறியாது திகைத்து நிற்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT