ரயிலில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்த காரணத்தால் அதன் மேற்கூரையின் மேல் ஏறி பயணிக்க முயன்றுள்ளார் வங்கதேச நாட்டை சேர்ந்த பெண் ஒருவர். இந்த வீடியோ இணைய வெளியில் வைரலாகி உள்ளது. இது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இது வங்கதேச நாட்டில் பதிவு செய்யப்பட்டது என பதிவர் தெரிவித்துள்ளதை வைத்து அறிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனை அவர்கள் பதிவிட்டுள்ள கமெண்ட்களின் ஊடாக தெரிந்து கொள்ள முடிகிறது.
ரயிலின் மேற்கூரை மீது ஏற முயலும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கூரையில் அமர்ந்துள்ளவர்கள் கைகொடுத்து உதவ முயற்சி செய்கிறார்கள். இருந்த போதும் தனது முயற்சியில் அந்த பெண் தோல்வியை தழுவுகிறார். காவலர் ஒருவர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியதே இதற்கு காரணம் என தெரிகிறது.
லட்ச கணக்கில் லைக்குகளும், ஆயிரக்கணக்கில் கமெண்டுகளும் இந்த வீடியோவுக்கு குவிந்துள்ளது. “வங்கதேச ரயில் நிலையத்தில் மற்றொரு நாள்” என அதற்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.