மற்றவை

சொன்னது சொன்னபடி: எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்படுமா?

செய்திப்பிரிவு

தி.நகரில் இருந்து ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக மாம்பலம் செல்ல இடதுபுறம் திரும்பும் இறக்கத்தில் சாலை விளக்குகள் இருக்கின்றன. ஆனால், அவை மங்கலாக உள்ளன. வெளிச்சம் குறைவாக இருப்பதால் அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அப்பகுதியில் ஒளி மிகுந்த எல்இடி விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்.ஜெகன்நாதன், கோடம்பாக்கம்

குபேரன் நகரில் சீரமைக்கப்படாத சாலை

மடிப்பாக்கம், குபேரன் நகரை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சாலைகள் சீரமைக்கப்பட்டுவிட்டன. ஆனால் குபேரன் நகரில் மட்டும் இதுவரை சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே இப்பகுதியில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசகர், மடிப்பாக்கம்

பாஸ்போர்ட் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் தேவை

அமைந்தகரை பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில், நேர்காணலுக்கு வருபவர்களின் வாகனங்களை அனுமதிப்பதில்லை. அதனால் பாதுகாப்பு இன்றி, வெளியில் வாகனங்களை நிறுத்தவேண்டி உள்ளது. மேலும், நேர்காணலுக்கான நேரம் வரும்போது மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். அங்கு காத்திருப்பு அறை இல்லாததால், ஒரு மணி நேரத்துக்கு மேல் வெளியில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் நேர்காணலுக்கு வருபவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். வடபழனி பாஸ்போர்ட் அலுவலகத்தில் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்ற வசதிகளை அமைந்தகரை அலுவலகத்திலும் செய்ய வேண்டும்.

டி.மோகன்ராஜன், முகப்பேர் மேற்கு

மணலி அம்பத்தூருக்கு நேரடி பஸ் வேண்டும்

மணலியில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் மணலியில் உள்ள பல தொழிலாளர்கள் பெரம்பூர் சென்று, ரயில் மூலமாக அம்பத்தூர் சென்று, அங்கிருந்து தொழிற்பேட்டைக்கு செல்கின்றனர். தொழிலாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மணலியில் இருந்து சின்னமாத்தூர் எம்எம்டிஏ பஸ் நிறுத்தம் வழியாக அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு நேரடியாக பஸ்களை இயக்க வேண்டும்.

டி.சங்கர், மணலி

பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள வெள்ளகுளம் பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் இக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று பஸ் பிடித்து பள்ளிக்கு செல்கின்றனர். பல மாணவிகள் சிரமப்படுகின்றனர். இதனாலேயே பலரும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். எனவே, பொன்னேரி - வெள்ளகுளம் இடையே பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

கே.எஸ்.நீலகண்டன், வெள்ளகுளம்

மீண்டும் திறக்கப்படுமா எழும்பூர் கேன்டீன்?

எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கேன்டீனில், மற்ற கடைகளைவிட உணவுப் பொருட்களின் விலை குறைவாக இருக்கிறது. இந்த கேன்டீன் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், அதிக விலை கொடுத்து வெளியே உள்ள ஹோட்டல்களில் சாப்பிடவேண்டி உள்ளது. மூடப்பட்ட ரயில்வே கேன்டீனை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.சிலம்புச்செல்வன், எழும்பூர்.

கொருக்குப்பேட்டை வழி கூடுதல் பஸ் தேவை

கொருக்குபேட்டை பகுதியில் கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்கள் வெளியே சென்றுவர ஷேர் ஆட்டோக்களையே நம்பியுள்ளனர். தினமும் அதற்காக ரூ.30 செலவிட வேண்டி உள்ளது. தற்போது இப்பகுதியில் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒருசில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கூலித் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் இருந்து கொருக்குப்பேட்டை வழியாக மின்ட் வரை கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

எம்.லோகய்யா, கொருக்குபேட்டை

மதுக்கடையை மூட நடவடிக்கை தேவை

சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பஸ் நிறுத்தம் அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. அங்கு மது அருந்த வருபவர்களால், அப்பகுதி வழியாக செல்லும் பெண்களுக்கு பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன. அங்கு இருந்தவர்கள் ஒரு பெண்ணை கேலி செய்ததாக சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, அந்த மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.கார்த்திகேயன், சின்னகாஞ்சிபுரம்

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

SCROLL FOR NEXT