பாட்டு, நிப்பாட்டு!
கலாச்சாரக் காவலர்கள் எனும் பெயரில் கலை வடிவங்களுக்குத் தடை விதிக்கும் வழக்கம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. சமீபத்திய உதாரணம், அஸ்ஸாம். அம்மாநிலத்தில், ஏப்ரல், மே மாதங்களில் கொண்டாடப்படும் ‘ரொங்காலி பிஹு’ பண்டிகையின்போது, நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இந்திப் பாடல் பாடத் தடை விதித்திருக்கிறது உல்ஃபா (இண்டிபென்டென்ட்) அமைப்பு. பாலிவுட் படங்களில் பாடும் அஸ்ஸாமியப் பாடகர்கள்கூட, தாங்கள் பாடிய இந்திப் பாடல்களை இப்பண்டிகையின்போது பாடக் கூடாது என்று கெடுபிடி காட்டுகிறது அந்த அமைப்பு. இது ‘தாலிபான் தனம்’ என்று அஸ்ஸாம் இசைக் கலைஞர்களிடமிருந்து எதிர்ப்பொலி கேட்கத் தொடங்கியிருக்கிறது!
செருப்பு, கருப்பு: தடுப்பு!
எதிர்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கைகளைச் செய்ய முடியுமா? முடியும் என்கிறார்கள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் பாதுகாவலர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் பாதல் மீது ஆஆக தொண்டர் ஒருவர் செருப்பை எறிந்தது நினைவிருக்கும். இதையடுத்து, பஞ்சாப் முதல்வரைச் சந்திக்க வருபவர்கள் காலணியை வெளியே விட்டுச் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதேபோல், புனித நூல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகப் போராட்டம் நடத்திவரும் சீக்கிய அமைப்புகள், பாதலுக்குக் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தின. இதையடுத்து, அவரைச் சந்திக்கச் செல்பவர்கள் கருப்பு நிறத்தில் எந்த உடையும் அணிந்திருக்கக் கூடாது என்று பாதுகாவலர்கள் கடுமை காட்டினர். சமீபத்தில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த அகாலி தளத் தலைவர் ஒருவர், கருப்பு நிற சாக்ஸ் அணிந்திருந்தாராம். அதைக் கழற்றிய பின்னர்தான் அவருக்கு முதல்வரின் தரிசனம் கிடைத்ததாம்!
‘உணவு’டன் நட்பு!
மான் குட்டிக்கு அடைக்கலம் தந்த சிறுத்தை, மனிதரிடம் நட்பு காட்டும் காட்டு யானை என்று அதிசய நிகழ்வுகள் அவ்வப்போது செய்தியாவதுண்டு. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ப்ரைமோர்ஸ்கி வன விலங்குகள் சரணாலயத்தில் உள்ள ‘ஆமுர்’ எனும் சைபீரியப் புலிக்கும் தைமூர் எனும் ஆட்டுக்கும் இடையிலான நட்பு இன்றைக்கு உலகம் முழுவதும் பேசப்படுகிறது. இத்தனைக்கும் உணவுக்காக ஆமுருக்கு வழங்கப்படும் உயிருள்ள ஆடுகளில் ஒன்றுதான் தைமூர். எனினும், அதைக் கண்டு ஆடும் அச்சப்படவில்லை. புலியும் அதைப் புசிக்கவில்லை. உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று அடித்துக்கொண்டிருக்கும்போது கடவுள் நமக்குச் சுட்டிக்காட்டும் அமைதிச் செய்தி என்கிறார்கள் ப்ரைமோர்ஸ்கி பகுதி மக்கள்.
ஊரு விட்டு ஊரு!
எந்த மசோதா கொண்டுவர முயன்றாலும் மாநிலங்களவையில் மல்லுக்கு நிற்கும் காங்கிரஸைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது மோடி அரசுக்கு. இதற்கிடையே, இனி ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களை அனுப்ப முடியாது எனும் அளவுக்கு, கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கர்நாடகாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவர். வாய்ப்பு அருகிவருவதைத் தொடர்ந்து தனது சொந்த மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு அவர் தேர்வுசெய்யப்படவிருக்கிறார்.