வாசகர் திருவிழா 2015 | சென்னை
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடியில் தமிழ் இருக்கை தொடங்க அனைவரும் தாராளமாக உதவ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.
‘தி இந்து’ தமிழ் நாளிதழின் 2-வது ஆண்டு நிறைவையொட்டி தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வாசகர் திருவிழா நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 10-வதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான வாசகர் திருவிழா, சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. ஜூனியர் காலேஜ் கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களான டாக்டர்கள் ஆறுமுகம், ஜானகிராமன், திருஞான சம்பந்தம் ஆகியோர் விரும்பினர். அதற்கு ரூ.40 கோடி தேவை. அதில், ஆறில் ஒரு பங்கை அவர்கள் கொடுத்துள்ளனர். மீதியை தமிழகத்தில்தான் நாம் திரட்ட வேண்டும். எல்லா அரசியல்வாதிகள், கட்சித் தொண்டர்கள், தமிழ் ரசிகர்களால் உயர்ந்துள்ள நடிகர்கள் எல்லாம் இதற்கு நிதி கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 585 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆளுக்கு ரூ.10 லட்சம் கொடுத் தால் போதும். ரூ.40 கோடி என்பது ரூ.400 கோடியாக கிடைக்கும். இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து, ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு, சுவாமி விமூர்த்தானந்தர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ‘தி இந்து’ குழுமத்தின் மூத்த பொதுமேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிர மணியன், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி னார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன், வாசகர் திருவிழாவின் நோக்கம் பற்றியும், சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தியும் பேசினார்.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘தி இந்து’ வெளியீடான ‘வீடில்லா புத்தகங்கள்’ நூலை கவிஞர் வைரமுத்து வெளியிட நீதிபதி என்.கிருபாகரன், வெ.இறையன்பு, சுவாமி விமூர்த்தானந்தர் பெற்றுக்கொண்டனர்.
‘தி இந்து’ இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் ஏற்புரை நிகழ்த்தினார். விளம்பரத் துறை தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்.
விழாவை ‘தி இந்து’வுடன் இணைந்து ஹார்லிக்ஸ் ஓட்ஸ், ராம் ப்ராபெர்டீஸ், லலிதா ஜூவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், வர்த்தமானன் பதிப்பகம், எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை, சிஎஸ்பி வங்கித் தேர்வு பயிற்சி நிறுவனம், லியோ காபி, விபிஎம் கேட்டரர்ஸ், ரெப்யூட் வாட்டர், கங்கா ஸ்வீட்ஸ் ஆகிய நிறுவனங்கள் வழங்கின.
படங்கள்: க.ஸ்ரீபரத்