தன்னை உயர்ந்த சாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்த்தப்பட்ட சாதியாகவும் கருதுபவன் மனநோயாளி என்பது அம்பேத்கரின் கூற்று. இந்த 'ஜனநாயக' நாட்டிலுள்ள அத்தகைய மனநோயாளிகளின் போக்கையும், அதனால் இச்சமுதாயத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அழிவையும் வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணப்படம் ஜெய் பீம் காம்ரேட்.
2011-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை உருவாக்க 14 ஆண்டுகள் ஆனதாக கூறியுள்ளார் இயக்குநர் ஆனந்த் பட்வர்தன். காரணம், 14 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்கிறது.
1997-ஆம் ஆண்டு. ஜூலை 11-ம் தேதி. காலை நேரம். மும்பையில் தலித் மக்கள் வசிக்கும் ராமாபாய் நகர் பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு 'செருப்பு மாலை' அணிவிக்கப்பட்டிருந்தது. 2,000 ஆண்டுகளுக்கு மேலாக மனித வாழ்வின் அடிப்படை வசதிகளான உணவு, உடை, வீடு ஆகியவை மறுக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவின் அடிமைகளாகவே வாழும் தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் அம்பேத்கர். சாதிய வேறுபாட்டையும் தீண்டாமையையும் ஒழிக்க கடுமையாக போராடி, பின் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு பிறகும் தொடர்ந்த இந்த சாதிய வெறியை எதிர்த்து கொதித்து எழுந்தது ராமாபாய் நகர். தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். .
அப்போது, அவர்களை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, தலித் மக்களின் உரிமைகளையும் முன்னேற்றத்தையும் தனது புரட்சிகர பாடல்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த மராட்டிய தலித் கவிஞர் விலாஸ் கோக்ரே, "இந்நாட்டில் இனி போராட்டத்திற்கு மதிப்பில்லை" என்று மனமுடைந்து தன் உயிரை மாய்ந்துக்கொண்டார்.
இச்சம்பவங்களை மையப்படுத்தி பயணிக்கும் இப்படம், காலங்காலமாகத் துப்புரவு தொழிலாளர்களாகவே நசுக்கப்படும் தலித் மக்களின் அவலநிலை, அவர்களுக்கு கிடைக்கும் சொற்பமான இடஒதுக்கீட்டை கூட கேள்விக்கேட்கும் பொதுமக்கள், தலித் உயிர்களை வேட்டையாடும் அதிகார வர்க்கம், அவர்களை தங்களது ஒட்டுக்காக காப்பாற்றும் சாதிய அரசியல்வாதிகள், பால் தாக்கரே, மனோகர் ஜோஷி போன்ற அரசியல்வாதிகளின் சாதிய வெறி தூண்டும் பேச்சுகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள், தொடரப்படும் வன்முறைகள், அக்கொடுமைகளை எதிர்த்து கலை நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது விழும் 'நக்ஸலைட்டு' முத்திரை, இவையனைத்திற்கும் ஆமாம் சாமி போடும் ஊடகங்கள் என முட்கள் நிறைந்த பாதையில் கொண்டுச்செல்கிறது.
இத்தனை துயரங்களை தாண்டியும், ஒவ்வொருவரின் முகத்தில் தெரிவது நம்பிக்கையும் போராட்ட குணமும்தான். பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் கணவர் ஆதிக்க சாதியினரால் வெட்டப்பட்டு உயிரிழக்கிறார். நியாயம் கேட்டு காவல்துறையை நாட, அவர்களும் புகாரை ஏற்க மறுக்கின்றனர். பின், தனது தன்னம்பிக்கையை மட்டுமே துணையாக கொண்டு, அன்றாடம் உழைந்து, தன் பிள்ளைகளை படிக்க வைத்து தனக்கென்று ஒர் நிலத்தையும் சொந்தமாகிக்கொண்டு கம்பீரமாக திரையில் நிற்கிறாள். எப்படி இத்தனை கொடுமைகளையும் தாங்கி நின்றீர்கள் என்ற கேள்விக்கு, அவரின் பதில் இதுதான். “எனக்கும் துக்கம் இருக்கும்தான். ஆனால் நான் எதையும் இழக்க விரும்பவில்லை. இழக்கவும் முடியாது. நான் இல்லையென்றால் என் பிள்ளைகளில் நிலை என்னாகும்?”
சாதி வேறுபாட்டை பிரதானமாக பேசும் இப்படம், ஆதனால் பெண்களுக்கு ஏற்படும் அதீத கொடுமைகளையும் குறிக்க தவறவில்லை. 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் கயர்லாஞ்சி கிராமத்தில் பௌத்த மதத்திற்கு மாறிய தலித் குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். அப்பெண்கள் கொல்லப்பட்டுவதற்குமுன், நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டுச்செல்லப்பட்டனர். அவர்களை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், சிபிஐ விசாரணையில் அது பதிவுசெய்யப்படவில்லை. மாறாக, இப்படுகொலைக்கு காரணமான ஆதிக்க சாதியினரின் ஆயுள் தண்டனை 25 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மக்களிடையே சமுத்துவத்தை வலியுறுத்தும் ‘கபீர் கலா மஞ்ச்’ என்ற கலைக்குழு, தலித் மக்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை எதிர்த்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். 5 பேர் கொண்ட இக்குழுவில் ஒரே பெண்ணாக இருந்த ஷீதல் சாதேவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், வெகுவிரைவிலேயே இக்குழுவை 'நக்ஸலைட்டு' அமைப்புடன் தொடர்புடையது என தடை செய்யப்பட்டது. இருப்பினும், இவர்களின் பாடலும் இசையும் புத்தும்புது நம்பிக்கைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மூன்று மணி நேரம் நீளும் இப்படத்தை பார்த்து முடிக்கையில், ஒரு மிகப்பெரிய மனிதப் போராட்டத்திலுள்ள வலி, வேதனை, துணிவு, வலிமை, உறுதி, இழப்பு, கனவு ஆகியவற்றை உணர முடிகிறது.
மாற்றப்படவேண்டியது அரசாங்கம் மட்டுமல்ல; இச்சமூகத்தையும் தான்!