நாகர்கோவில் `தி இந்து’ தமிழ் நாளிதழ் ஒரு சாயாத கோபுரம், சுடர் விளக்கு, தொலை நோக்கி, பேராயுதம் என்று நாகர்கோவி லில் நேற்று நடைபெற்ற வாசகர் திருவிழாவில், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் புகழாரம் சூட்டினார்.
`தி இந்து’ தமிழ் நாளிதழின் இரண்டாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான வாசகர் திருவிழா நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. எழுத்தாளர் பொன்னீலன் பேசியதாவது:
செக்யூலர், ஜனநாயக, சோசலிஷ குடியரசு என்போம். செக்யூலர் என்றால் மண்சார்ந்த, மக்கள் சார்ந்த என்று பொருள்படும். அதன்படி செய்திகளை அடித்தளம் சார்ந்து, மக்கள் சார்ந்து `தி இந்து’ வெளியிடுகிறது. கேலிச் சித்திரங்கள் விசாலமான பார்வையுடன் இந்தியாவையும், தமிழகத்தையும் தரிசிக்கும் வகையில் விமர்சன நோக்கில் இருக்கின்றன. செய்திகளை ஊடுருவிப்பார்த்தால், அவை வெறும் செய்திகளாக இருக்காது. அவை விமர்சனங்களை தாங்கியிருக்கும், மக்களை சிந்திக்க வைக்கும்.
தமிழ் இந்துவைப் பற்றி 4 விஷயங்களை எனக்கு தெரிந்தவர் சொன்னார். நானும் அதை ஒத்துக்கொண்டேன். இது ஒரு சாயாத கோபுரம். எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நின்று, செய்திகளை தரும் பத்திரிகை.
இது ஒரு சுடர் விளக்கு. போராட வேண்டிய விஷயங்களுக்கு தயங்கக்கூடாது என்பதற்கு தெளிவாக வழிகாட்டும் சுடர் விளக்கு. மதுவுக்கு எதிராக மக்களைத் தூண்டியது.
இது ஒரு தொலைநோக்கி. தாமிரபரணியைப்போன்று பல்வேறு இயற்கை வளங்களை கொள்ளை யடிக்கிறார்கள். மலைகளை உடைக் கிறார்கள். இதற்கு எதிராக தமிழ் இந்து குரல் கொடுக்கிறது.
இது ஒரு பேராயுதம். கலை, இலக்கியங்களை பேராயுதமாகக் கொண்டு எல்லா தரப்பி னரையும் தூண்டிவிடுகிறது; எழுச்சியுற வைக்கிறது. 3-ம் பாலினத்தவருக்காகவும் பாடுபடுகிறது. பகுத்தறிவு வாதிகள் கொல்லப்படுவதற்கு எதிராக `தி இந்து’ எழுதுகிறது. பெருமாள்முருகன் போன்ற இலக்கிய வாதிகளுக்கு குரல் கொடுக்கிறது.
`மாயாபஜார்’ பகுதியில் நம் நாட்டு சாதனையாளர்கள் குறித்து வெளியிட்டால் இளைய தலைமுறைக்கு அறிவுவிருத்தியாகும். புதிய தமிழ் நூல்களை, வெளியே தெரியாத படைப்பாளிகள், கலைஞர் கள் பற்றி செய்தி வெளியிட்டால் தமிழகத்தின் முகம் மாறும், நமது முகமும் மாறும்.
இலக்கிய வளர்ச்சிக்கு அதிக இடம் ஒதுக்கி, மக்களை தரப்படுத்த வேண்டும். ஆங்கில இந்துவைப்போல், தமிழ் இந்துவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற வேண்டும்’ என்றார் பொன்னீலன்.
விழாவை `தி இந்து’ குழுமத்தின் மூத்த பொதுமேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். `தி இந்து’ முதுநிலை மண்டல மேலாளர் (விளம்பரம்) எஸ்.வெங்கடசுப்பிரமணியன் நன்றி கூறினார். `தி இந்து’ இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் ஏற்புரை வழங்கினார்.
ஹார்லிக்ஸ் ஓட்ஸ், ராம் ப்ராபெர்டிஸ், லலிதா ஜூவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், ஹோட்டல் விஜயதா ஆகிய நிறுவனங்கள் விழாவை இணைந்து நடத்தின. விழா அரங்கில் `தி இந்து’ குழுமத்தின் சிறப்பு வெளியீடுகளான திருப்பதி பிரம்மோற்சவம் மலர், மெல்லத்தமிழன் இனி, வேலையை காதலி, நம் மக்கள் நம் சொத்து உள்ளிட்ட பல்வேறு நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அரங்கம் நிரம்ப அமர்ந்திருந்து வாசகர்கள் தங்கள் ஏகோபித்த ஆதரவை நல்கினர்.