குழந்தை யஷ்வந்திகாவுடன் பெற்றோர் 
மற்றவை

2 வயதுக் குழந்தைக்குப் பழுதடைந்த கல்லீரல்; பணமில்லாமல் தவிக்கும் பெற்றோர்: அறுவை சிகிச்சைக்கு உதவி கிடைக்குமா?

செய்திப்பிரிவு

தங்களின் 2 வயதுக் குழந்தை மழலைக் குரலில் பேசுவதை ஆசைதீரக் கேட்டு ரசித்து ஆனந்தப்படும் சூழல் சோமசுந்தரத்துக்கு வாய்க்கவில்லை. கல்லீரல் செயலிழந்து, செயல்பாடுகள் குறைந்து, நடக்கக்கூட முடியாமல் இருக்கும் மகளின் சிகிச்சைக்குத் தேவையான நிதியில்லாமல் தவித்து வருகிறார் அவர்.

செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் இரண்டு வயது மகள் யஷ்வந்திகா. அக்குழந்ததை பிறக்கும்போதே மஞ்சள் காமாலை ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் யஷ்வந்திகா முழுமையாகக் குணமாகவில்லை. இடையிடையே அக்குழந்தையின் உடலும் கண்களும் மஞ்சள் நிறமாகின. தொடர் மருத்துவப் பரிசோதனையில் குழந்தை யஷ்வந்திகாவின் கல்லீரல் பாதிப்படைந்தது தெரியவந்தது.

இதுகுறித்து இன்னும் விரிவாகப் பேசுகிறார் குழந்தையின் தந்தை சோமசுந்தரம். ''பிறந்ததில் இருந்து இரண்டு வருடங்களாகவே மாறி மாறி மருத்துவமனைக்குச் சென்றுகொண்டே இருக்கிறோம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோதித்தபோது குழந்தைக்கு பிலிருபின் 25 mg/dl-க்கும் அதிகமாக (இயல்பு - 0.2mg/dl) இருந்தது. அங்கிருந்து சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் செல்லப் பரிந்துரைத்தனர். அங்கு 5 மாதங்கள் தங்கி, சிகிச்சை பெற்றோம். ஆனாலும் சிகிச்சையில் 20-க்கும் கீழே சென்ற அளவு, பிறகு குறையவில்லை. சிகிச்சையை நிறுத்தினால் மீண்டும் அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு யஷ்வந்திகாவை அழைத்துச் சென்றோம். அதில் குழந்தைக்குக் கல்லீரல் செயலிழந்துள்ளது தெரியவந்தது. டைப் 1 கல்லீரல் என்பதால், இதற்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று கூறியுள்ளனர். இதற்கு சுமார் ரூ.23.5 லட்சம் செலவாகும் என்றும் கொடையாளி தேவை என்றும் தெரிவித்தனர். தாய்க்கும் குழந்தைக்கும் ஒரே ரத்த வகை என்பதால், தாயே கல்லீரல் தானம் செய்ய உள்ளார்’’ என்றார் சோமசுந்தரம்.

தாய் சிவகாமி பேசுகையில், ''ஓடியாடி விளையாடற வயசுல, ஓயாம ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுத் திரியறோம். போற எடமெல்லாம், புள்ளைக்கு ஊசியக் குத்தி ரத்தப் பரிசோதனை செய்றாங்க. வேறென்ன செய்ய முடியும்னு, மனசைத் தேத்திக்கறேன். அவ சரியாகணும்னா இதையெல்லாம் செஞ்சுதான் ஆகணும்னு புரியுது. எத்தனை கஷ்டப்பட்டாலும் என் குழந்தை, எப்படியாவது மீண்டு வந்தாப் போதும்!'' என்று விசும்புகிறார் தாய் சிவகாமி.

கிரவுட் ஃபண்டிங் தளமான மிலாப் மூலம் பணம் திரட்ட முடிவெடுத்த சோமசுந்தரத்துக்கு, இதுவரை ரூ.3.3 லட்சம் கிடைத்துள்ளது. எனினும் அறுவை சிகிச்சைக்கான தொகை பெரிது என்பதால், உதவும் உள்ளங்களுக்காகக் காத்து நிற்கிறார்.

உதவ விரும்புவோருக்காக:
K. Somasundaram
City union bank
IFS CODE:CIUB0000130
A/C NO:130001000472831

செல்பேசி எண்: 90032 66334

SCROLL FOR NEXT