* கேரள ஐபிஎஸ் பெண் அதிகாரி மெரீன் ஜோஸப் ஒரு பொது நிகழ்ச்சியில் நடிகர் நிவின் பாலியுடன் எடுத்துக்கொண்ட படம் விமர்சனத்துக்குள்ளானது. “பொறுப்புள்ள ஒரு போலீஸ் அதிகாரி தன் பணியை விட்டுவிட்டு எப்படி நடிகருடன் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிரலாம்?” என்று எழுதினார்கள். “எதையும் பரபரப்பாக்குபவர்களின் விமர்சனம் இது” என்று இதற்குப் பதிலடி தந்தார் மெரீன் ஜோஸப். இப்போது அவருக்கு ஆதரவாகப் பெரும் அணி திரள்கிறது. “பிரதமர் மோடியே எங்கு சென்றாலும் செல்ஃபி எடுத்துக்கொள்ளும்போது இதெல்லாம் ஒரு பிரச்சினையா; அதுவும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வில் இப்படியான தேவையற்ற விமர்சனங்களெல்லாம் எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும்?” என்று களம் இறங்கியிருக்கிறார்கள் பெண்கள். நியாயம்தானே?
* யாகூப் மேமனின் கருணை மனுவைத் தள்ளுபடிசெய்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூடவே இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறார். இதேபோல் மரண தண்டனையை ரத்துசெய்யக் கோரித் தாக்கல்செய்த எட்டுப் பேரின் கருணை மனுக்களையும் தள்ளுபடிசெய்திருக்கிறார்.
* விஸ்வரூபம் எடுத்த வியாபம் விவகாரம் நாடாளுமன்றம் வரை பலமாக எதிரொலித்தது பாஜக தரப்பில் சங்கடங்களை ஏற்படுத்தியிருப்பது தெரிந்த சேதி. பதில் தாக்குதல்களுக்கு முழு அளவில் தயாராகிவருகிறது மத்தியப் பிரதேச பாஜக அரசு. திக் விஜய் சிங்தான் பாஜக-வின் முக்கிய இலக்கு. 1993 முதல் 2003 வரை மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த திக் விஜய் சிங், தனது ஆட்சிக்காலத்தில் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறாரா என்பதைத் துப்பறிய, பழைய கோப்புகளை அலசுகிறார்கள் அதிகாரிகள். அவரது ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவைத் தலைமைச் செயலகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாக பாஜக கூறிவந்தது. இதில் தொடர்புடையவர் என்று கூறப்படும் காங்கிரஸ் பெண் தலைவர் ஒருவர் 18 ஆண்டுகளுக்கு முன்னர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தைத் தற்போது கையில் எடுத்திருக்கிறது பாஜக. அரசியலில் எதுவும் சாதாரணமல்ல!
* வியாபம் முறைகேட்டில் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்படும் ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலர் சுரேஷ் சோனியை ஓரங்கட்டும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடக்கும்வரை அவருக்குக் கட்டாய ஓய்வு கொடுக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த சுரேஷ் சோனி, தனது உடல்நலத்தைக் காரணம்காட்டி விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.
* ரயில்வே துறை சீர்திருத்தம் என்ற பெயரில் தனியார்மயத்துக்கு வழிவகுக்கும் விவேக் தேவ்ராய் அறிக்கையைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும் அதற்கு எதிராக ஜூன் 26-ல் அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றன. பெரும் போராட்டத்தை அவை கையில் எடுக்கும் வாய்ப்பிருப்பதால், மத்திய அரசு பின்வாங்கும் என்று சொல் கின்றன டெல்லி வட்டாரங்கள்.