மதுரை காக்கைப்பாடினியார் மேல் நிலைப் பள்ளி மாணவி பி.அனுசியா 10-ம் வகுப்பு தேர்வில் தமிழில் 98, ஆங்கிலத்தில் 96, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 என 494 மதிப்பெண் பெற்று மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடத்தைப் பிடித்தார். சிவகங்கை மாவட்டம் வடக்கு கீரனூரை சொந்த ஊராகக் கொண்ட இவர், பிறந்த 5-வது மாதத்திலேயே தாய் மல்லிகா வையும், 5-ம் வகுப்பு படிக்கும் போது தந்தை பாண்டியனையும் இழந்தார்.
தாத்தா, பாட்டியுடன்…
அதன்பின் மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள தாய் வழி தாத்தா சுப்பிரமணியன் வீட்டில் வசித்து வருகிறார். ஏழைக் குடும்பம் என்பதால் தாத்தா சுப்பிர மணியன், பாட்டி பாப்பம்மாள் ஆகிய இருவரும் அரசாங்கம் தங்களுக்கு மாதந்தோறும் வழங் கும் முதியோர் உதவித்தொகை யைக் கொண்டு அனுசியாவைப் படிக்க வைத்தனர். அவர்களுக்குப் பெருமை தேடித்தரும் வகையில் அனுசியாவும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்றார். எனினும், குடும்பத்தின் வறுமை காரணமாக தொடர்ந்து படிக்க இயலுமா, விரும்பியபடி மருத்துவராக முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டதால் தேர்வு முடிவு வெளியான நாளில் அனுசியா கண்ணீர்விட்டு அழுதார். இந்த புகைப்படத்துடன் அனுசியாவின் ஏழ்மை நிலை குறித்து செய்தி வெளியானது.
தேடி வந்த ஆதரவு
அன்றைய தினமே தன்னார்வலர் கள், அறக்கட்டளை நிர்வாகிகள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பல நூறு பேர் அனுசியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும், வீட்டுக்கே நேரில் சென்று வாழ்த்தினர். மேலும் மேற்படிப் புக்கு உதவுவதாக வாக்குறுதியும் அளித்தனர். அவர்களில் சிலர் வாக்குறுதியோடு நிறுத்திக் கொள் ளாமல், உடனடியாக தங்களால் இயன்ற நிதி உதவியையும் அளித்தனர். இவர்கள் மூலம் சுமார் ரூ.25 ஆயிரம் வரை கிடைத்துள்ளது. மேலும் சிலர், நிதியாக கொடுக்காமல் அனுசியா பெயரில் டி.டி. எடுத்து அதனை காக்கைப்பாடினியார் பள்ளி நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.
ரூ.50 ஆயிரம் டெபாசிட்
இதுதவிர மதுரை மாநகராட்சியின் கல்விக் குழு மூலம் மாணவி அனுசியாவுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி செய்ய உள்ளதாக மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். 2 ஆண்டு டெபாசிட் என்ற அடிப்படையில் அளிக்கப்படும் இந்தத் தொகை யிலிருந்து கிடைக்கும் வட்டியை மாதந்தோறும் அனுசியா பயன் படுத்திக் கொள்ள முடியும்.
மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்திலிருந்து இந்த மாணவியின் முழு விவரங் களையும் கேட்டுப் பெற்றுள்ளதால் விரைவில் அங்கிருந்தும் அனுசியா வுக்கு நிதியுதவி கிடைக்கும் என கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆதரவு கரங்கள்
இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஆதரவுக்கரங் களால் அனுசியாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. விரும்பிய படி மருத்துவராகிவிட முடியும் என்ற நம்பிக்கையும் அவர் மனதில் துளிர் விட்டிருக்கிறது. தேர்வு வெளியான நாளில் அழுத முகத்துடன் காணப்பட்ட அவர், தற்போது இன்முகத்துடன் காணப்படுகிறார்.
இன்முகத்துடன் நன்றி
இதுபற்றி அவர் கூறியது: தனியார் பள்ளியில் சேர்த்து விடுவதாகவும், படிப்புச் செலவை ஏற்பதாகவும் சிலர் கூறியுள்ளனர். உதவி செய்ய முன்வந்த அனைவருக்கும் நன்றி. இதற்கு காரணமான ‘தி இந்து-வுக்கும் நன்றி.
மேல்நிலைப் படிப்பை மாநகராட்சி பள்ளியிலேயே தொடர விரும்புகிறேன். டியூசனுக்கு ஆகும் செலவை மட்டும் யாரேனும் ஏற்றுக்கொண்டால் போதும். நிச்சயம் பிளஸ் 2 தேர்விலும அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவராகி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுமட்டும் நடந்துவிட்டால், பிற்காலத்தில் என்னைப்போல் கஷ்டப்படும் பல மாணவ மாணவிகளை, நிச்சயம் நானே படிக்க வைப்பேன் என்ற உறுதியுடன் இருக்கிறேன்’ என்றார்.