மற்றவை

செந்தூர் விரைவு ரயில் வேகத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

செய்திப்பிரிவு

செந்தூர் விரைவு ரயிலில் திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்தடைய 17 மணி நேரமாகிறது. எனவே, இந்த ரயிலின் வேகத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் பி.ராஜாராம் கூறியதாவது:

திருச்செந்தூர் - சென்னை இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயிலை நம்பி இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆனால், இந்த விரைவு ரயில் மிகவும் காலதாமதமாக செல்கிறது. சென்னையில் மாலை 4.05 மணிக்கு புறப்படும் இந்த விரைவு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு திருச்செந்தூரை வந்தடைகிறது. பயணம் நேரம் மொத்தம் 17 மணியாக உள்ளது.

இதனால் முக்கியமான அலுவலகப் பணிகளுக்கோ, வியாபாரம் ரீதியாகவோ செல்வோர் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் கடுமையாக அவதிப்படுகின்றனர். திட்டமிட்டபடி எந்த பணியையும் மேற்கொள்ள முடியவில்லை. வரும் வழியில் மற்ற ரயில்களுக்கு இந்த விரைவு ரயில் வழிவிட்டு ஓரம் கட்டப்படுகிறது. பஸ்களில் பயணம் செய்தால் கூட செந்தூர் விரைவு ரயிலை விட வேகமாக செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி போன்ற விரைவு ரயில்கள் வேகமாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் சென்றடைகின்றன. எனவே, இந்த ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணையை தயாரிக்கும்போது செந்தூர் விரைவு ரயிலின் வேகத்தை கூட்டவும், பயண நேரத்தை குறைக்கவும் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில் பயணிகளின் இந்த கோரிக்கைகள் குறித்து ரயில்வே வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். கால அட்டவணையில் மாற்றம் செய்வது குறித்து ரயில்வே வாரியம்தான் இறுதி முடிவு செய்து அறிவிக்கும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT