சாதனா, சரண்யா, சங்கீதா, தீபிகா, விண்ணரசி பெயர்களை படித்தவுடன் ஏதோ ப்ளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் பட்டியல் என நினைக்கவேண்டாம். எல்லாம் ஒரே தாய் பெற்ற பெண் பிள்ளைகள்.
‘ஆறாவதாக ஆண் குழந்தை பிறக்கும்' என்ற ஜோசியரின் வாக்கை நம்பி, அடுத்த ஆண் வாரிசுக்காக தயாராகி வரும் அந்த அம்மா வேறு எங்கும் இல்லை. நம்ம சிங்கார சென்னையில், பூக்கடை காவல் நிலையம் பக்கத்திலே சாலையோரம் வசிக்கும் சுதாதான்.
இவரது வீட்டுக்காரர் மீன்பாடி வண்டி இழுக்கிறார். வீட்டின் முன் வரிசையாக அமர வைத்து சோறை பங்கு போட்டு ஊட்டி விட்டுக்கொண்டிருந்த சுதாவிடம், இந்த காலத்தில் எப்படி இத்தனை பெண் குழந்தைகள் என்று கேட்டதற்கு, 'அவருக்கு ஆண் குழந்தைனா ரொம்ப இஷ்டம் அதான்' என்றார்.
படிக்க வைக்க, சாப்பாடு போட என்ன செய்கிறீர்கள் என்றால், ‘அருகில் இருக்கும் அரசு பள்ளியில் 3 பிள்ளைகள் படிக்கின்றனர். காலை, மதியம் பெரும்பாலும் அம்மா உணவகத்தில் சாப்பாடு என வாழ்க்கை போகிறது' என்றார்.
குடும்பக்கட்டுப்பாடு குறித்தும், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்தும் இவருக்கு ஏதும் தெரியவில்லை. அரசு மற்றும் தன்னர்வ அமைப்புகள் இவர்களைப் போன்ற அடித்தட்டு மக்களிடம் சென்று பெண் குழந்தைகளின் பங்களிப்பு குறித்தும், ஆணுக்கு பெண் நிகரானவள் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக சாலையோரத்தில் வசிக்கும் இதுபோன்ற அடித்தட்டு மக்களுக்கு இரவு நேரக் கல்வி, விழிப்புணர்வு ஏற்படுத்திட அரசு முன்வர வேண்டும். மேலும் 2 பெண் குழந்தை பெற்று, குடும்பக் கட்டுப்பாடு செய்தவர்களுக்கு அரசு தரும் சலுகைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவர்கள் வாழ்வு வளம் பெரும்; நாட்டின் மக்கள் தொகை பெருக்கமும் கட்டுப்படும். இல்லையேல் சீனாவை முந்தி மக்கள் தொகையில் முதல் நாடாக இந்தியா மாற வேண்டியதுதான்.