யோகம் என்பது நம்மை நாமே பார்க்கக்கூடிய கண்ணாடி என்று எளி மைப்படுத்தலாம். ஆசனப் பயிற்சியாக இருந்தால் உடல் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். பிராணாயாமமாக இருந்தால் உள்ளுக்குள் இருக்கும் நிலையை அறியலாம். தியானப் பயிற்சியாக இருந்தால் மனநிலை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
காலைநேரப் பயிற்சிக்கு எப்போதுமே தனித்தன்மையும் கூடுதல் பலன்களும் உண்டு. ஒரு முழு நாளுக்கான சுருதி அப்போதுதான் சேர்க்கப்படுகிறது என்று சொல்லலாம். காலையில் மனதில் விழும் முதல் எண்ணம், முதல் உணர்வுகூட அடுத்தடுத்த செயல்களில் பரவி, அன்றைய நாளுக்கான ஓர் அடித்தளம் ஏற்படுத்துவதில் பங்கு வகிக்கிறது.
யோகாவில் உடலுக்கு, மூச்சுக்கு, மனதுக்கு, வாழ்க்கை ஒழுக்கத்துக்கு, ஞானத்துக்கு என்று நிறைய பயிற்சிகள் விரவிக் கிடக்கின்றன. உடலை அசைக்காமல் பெரும் ஆனந்தத்தை அதிகாலையில் பெற முடியும். மூச்சின் சரியான பயிற்சியால் முழு மனமும் கைக்குள் இருக்கும். ஆசனங்களால் முழு உடலும் தயாராகி எதற்கும் ‘முடியும் முடியும்’ என்று சொல்லும்.
காலம், மனிதர்களுக்கு ஆண்டாண்டு காலமாய் வழங்கிவரும் ஆரோக்கிய சுரபிதான் ‘யோகா’. உள்ளே போகப்போக அதன் தூரம் இன்னும் நீள்கிறது; எல்லை விரிகிறது; அனுபவம் புதிதாகிறது. ஒரு நாளை உற்சாகமாக ஆரோக்கியமாக தொடங்கிவிட்டால், தொடரும் எண்ணங்களும், செயல்களும் அதன் தாக்கத்துக்கு உள்ளாகும். இதன்மூலம் வாழ்வில் ஆழமான மாற்றங்கள் நிகழும்.
காலையில் நேரம் இல்லை என்று கூறுபவர்கள் பயிற்சிகளை மாலையில் செய்யலாம்.
இயந்திரமாய்த் தொடங்கிய நாள், மனிதத்தன்மைகளை விட்டு தூரமாகப் போகும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. அன்றைய நாளின் எண்ணங்களும், உணர்வுகளும் தூங்கும்போதும் தொடரும். எனவே, ஒரு நாளின் இறுதியில், சேர்ந்த சோர்வுகளை, மன அழுக்குகளை, உடல் உபாதைகளை நீக்கவும் யோகா உதவுகிறது. அதோடு, நல்ல தூக்கத்தையும் தருகிறது.
சரியான தூக்கம் இல்லாமல் இன்று பலர் உடல், மனநோய்களுக்கு ஆளாகி துன்பப்படுவது இயல்பாகி விட்டது. அதனால், மாலை நேர யோகப் பயிற்சியும் இன்றைய வாழ்க்கைக்கு முக்கியம். எந்த நிலையிலும் மனிதர்களின் வலியையும் பிரச்சினைகளையும் குறைத்து, அவர்களை ஆரோக்கியமானவர்களாக, நம்பிக்கை மிகுந்தவர்களாக மாற்றுகிறது யோகா.
தினமும் பலப் பல தகவல்கள், உணர்வுகள் நமக்குள் சென்று பாடாய்ப்படுத்துகின்றன. அதை மீறி, ஒவ்வொரு நாளும் நாம் நினைத்ததைச் செயல்படுத்த உடலையும், மனதையும் தயார் செய்ய வேண்டியுள்ளது. இல்லாவிட்டால், எல்லா திட்டங்களும் வெறும் எண்ண அளவிலேயே நின்றுவிடும்.
ஒருநாள் முழுவதும் உடலின் தவறான - அதீதமான பயன்பாட்டை யும், மன அழுத்தத்தையும் கொஞ்சமாவது குறைத்தால் இரவு நல்ல தூக்கம் வரும். அடுத்த நாள் பொழுது, உற்சாகமாக விடியும்.
மனதில் வேலை செய்யக்கூடிய ஒரு பயிற்சி முறைதான் யோகா. ஒருவருக்கு மனம் சரியாக இருந்து விட்டால், எதையும் சரிசெய்து கொள்ளலாம். அது சரியில்லை என்றால், எது இருந்தும் பயனில்லை. யோகப் பயணத்தில் மன அமைதி ஏற்படும்போதே, எண்ணக் கூட்டங்களின் துரத்தல்கள் குறையும், சுயத்தையும் சுற்றத்தையும் சரியாகப் பார்க்கத் தொடங்கலாம். எங்கும் பரவிக் கிடக்கும் கோபத் தணல் சற்றே குறையத் தொடங்கும்.
இதனால் பல விரயங்கள் தடுக்கப்படும். இதன் காரணமாக, பயிற்சி செய்பவர்கள் மனித இயல்புகளில் கூடுதலாய் இருக்க முடியும்.
யோகாவை இன்று உலகின் பல நாடுகள் மிக சிறப்பாகப் பயன்படுத்துகின்றன. அதன் எல்லை அங்கெல்லாம் தினம்தினம் பல நிலைகளில் விரிகிறது. மொழி, மதம், நாடு கடந்து, மனித இனத்தையே யோகா வளப்படுத்திக்கொண்டிருக்கிறது. நம்மை நாமே அறிந்துகொள்கிற, பார்த்துக்கொள்கிற ஒரு மகத்துவத்தை யோகா அளிக்கிறது.
உலக யோகா தினத்தின்போது மட்டும் யோகாவை நினைத்துவிட்டு போகாமல், வாழ்நாள் முழுவதும் நாம் அதற்கு உரிய இடம் தரும்போது, வாழ்வில் நமக்கு உரிய இடத்தை யோகா தரும்!
கட்டுரை ஆசிரியர்: ‘ஏயெம்’ யோகாசன ஆசிரியர்.
தொடர்புக்கு: amalaimail@gmail.com
- நாளையும் யோகம் வரும்..