*பாலிவுட்டின் ராணியாகி இருக்கும் கங்கணா ரணாவத் தெளிவாக இருக்கிறார். ரூ.100 கோடி வசூலைத் தாண்டி ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ படத்துக்குப் பின் வாய்ப்புகள் குவிந்தாலும் கதைக்குத்தான் முதலிடம் என்கிறார். சல்மான் கானின் ‘சுல்தான்’, விஷால் பரத்வாஜின் ‘ரங்கூன்’ இரு வாய்ப்புகளும் ஒரே சமயத்தில் கதவைத் தட்டின. கங்கணா தேர்ந்தெடுத்திருப்பது என்னவோ இயக்குநரின் படத்தைத்தான். ‘ரங்கூன்’ சலோ!
*அமெரிக்கா மீது இஸ்ரேல் தாக்குதல்! - இப்படியொரு செய்தியைக் கற்பனையாவது செய்துபார்க்க முடியுமா? நடந்திருக்கிறது. இஸ்ரேல்-அரபு நாடுகள் போர் நடந்த சமயத்தில், 1967 ஜூன் 8 அன்று மத்திய தரைக்கடலில் ‘யூ.எஸ்.எஸ். லிபர்ட்டி’ எனும் அமெரிக்கக் கப்பல் மீது விமானப் படை தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்ரேல். 34 பேர் பலி. 171 பேர் படுகாயம். ஆனால், “எகிப்து கப்பல் என்று கணித்ததால் நேரிட்ட தவறு” என்று இஸ்ரேல் சமாளித்திருக்கிறது; இஸ்ரேலுடன் போர் மூண்டால் வரலாறே மாறும் என்று அமெரிக்காவும் வேறு வழியில்லாமல் அதை விட்டிருக்கிறது. போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8-ல் நினைவு தினம் அனுசரிக்கின்றனர்.
*ராஜமுந்திரி அருகே கோதாவரி நதிக்கரையில் 27 அடி உயரத்தில் என்.டி.ஆருக்கு வெண்கலச் சிலை அமைத்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. என்.டி.ஆர். விருப்ப வேடமான கிருஷ்ணர் தோற்றத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிலைதான் உலகில் திரைப்பட நடிகர் ஒருவர் நடித்த கதாபாத்திரத்துக்கு அமைக்கப்படும் உயரமான சிலையாம். அடுத்த வாரம் திறப்பு விழா நடக்கிறது.
*பொதுத் துறை நிறுவனங்களின் தொழிலாளர் அமைப்புகள் கவலை தோய உட்கார்ந்திருக்கின்றன. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதாக அறிவித்தார் அல்லவா அருண் ஜேட்லி, தற்போது எந்தெந்த நிறுவனங்களின் பங்குகளை விற்கலாம் எனும் பட்டியல் தயாராகிக்கொண்டிருக்கிறது. கோல் இந்தியா, ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களுடன் ஓஎன்ஜிசி விதேஷ், சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ், பாரத் ப்ராட் பேண்ட் என்று பட்டியல் நீள்கிறது.
*யாரும் தொட முடியாத ஆழத்திலுள்ள தாதுப் பொருட்களை அள்ளத் தயாராகிறது சீனா. கடலில் 7,000 மீட்டர் ஆழம் சென்று ஆராயும் ‘நீர்மூழ்கிச் சாதன’த்தை உருவாக்கும் பணியை 2002-ல் தொடங்கிய அது, ‘அக்குவாட்டிக் டிராகன்’ எனும் ஏராளமான கடல் ராட்சதன்களை உருவாக்கியிருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழமாகச் சென்று தாதுத் தேடலில் ஈடுபட்டிருக்கின்றன இவை. ஆழ்கடல் பகுதியின் உயிர்ச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனக் குரல் எழுப்பினாலும் அதையெல்லாம் துளியும் சட்டை செய்யவில்லை சீனா. இப்போது இந்தியாவும் இப்படியான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.
*கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்வது சட்டப்படி குற்றம். ஆனால், சட்டவிரோதமாக அதைத் தெரிந்துகொண்டு பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்துகொள்பவர்களும் இருக்கிறார்கள். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 72.86% கல்வியறிவுள்ள சேலம் மாவட்டத்தில் இது அதிகம் என்று தெரியவந்திருக்கிறது. இந்தக் கொடுமையின் காரணமாக 1,000 ஆண்களுக்கு 954 என்ற வீதத்திலேயே இங்கு பெண்கள் இருக்கிறார்கள்.