பிப்ரவரி மாதம் உதய்பூரில் நடந்த திருமணத்தில் ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ் நடனமாடினார் இல்லையா? அதற்காக அவர் வாங்கிய தொகை ரூ. 6.25 கோடி என்று வெளியான தகவல் உண்மையா என்ற கேள்விக்குச் சரியான பதிலடி கொடுக்கிறது ஒரு ட்விட்: “போஃபர்ஸ் ஊழலில் இந்துஜா குழுமமும் கோபிசந்தும் அடிபட்டனர். ஒரு பாட்டுக்கு ரூ. 6 கோடியெல்லாம் அவர்களுக்கு ஒரு தொகையா?”
இலங்கை ராணுவம் நடத்திய இனப்படுகொலையின் சாட்சியங்கள் விடாமல் துரத்துகின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர் பாலகுமாரனும் அவரது மகனும் இலங்கை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் படத்தை ட்விட்டரில் வெளியிட்ட செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹாரிஸன் அவர்களுடைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். போர்க் குற்றத்துக்கான ஆதாரங்களில் ஒன்று இது; இலங்கை அரசே பதில் சொல் என்ற குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன.
ஒவ்வொரு மரணத்துக்குப் பின்னும் எத்தனையெத்தனை நிறைவேறாக் கனவுகள்! 42 ஆண்டுகளாகக் கோமாவில் கிடந்து மரணமடைந்த அருணா ஷான்பாக், கே.இ.எம். நர்ஸிங் கல்லூரியில் படித்தபோது மிகச் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தாராம். ஆனந்த் கய்டோண்ட் எனும் ஆசிரியர் கூறியிருக்கிறார். அவர் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே பணியாற்றிய மருத்துவரைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில்தான் அவர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை எல்லாவற்றையும் சிதைத்துவிட்டிருக்கிறது.
அனில்குமார் எனும் விவசாயியைத் திருமணம் செய்துகொண்ட கேரள பழங்குடி மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பி.கே. ஜெயலட்சுமிக்கு அருமையான திருமணப் பரிசை அளித்திருக்கிறார் ஏ.கே. அந்தோணி. ஜெயலட்சுமி படித்த பள்ளிக்குத் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் தந்திருக்கிறார் இந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர்!
மோடியின் நிழலில் சௌகரியம் தேடாமல் தனக்கென ஒரு பாதையில் செல்லும் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேலுக்கும் அமித் ஷாவுக்கும் இடையில் உட்பூசல் ஏகமாக அதிகரித்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக பெறும் வெற்றியைப் பொறுத்துதான் ஆனந்தி பென்னின் எதிர்காலம் இருக்கிறது என்கிறார்கள் குஜராத் பாஜகவினர்.
எந்த ஊருக்குப் போனாலும், வீடு வாங்க ஆளில்லை என்று கையைச் சொறிகிறார்கள் ரியல் எஸ்டேட் ஆட்கள். ஆனால், இப்படிப்பட்ட சூழலில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீட்டுமனைகளின் விலை கிடுகிடுவென்று உயர்ந்திருப்பதை உறுதிசெய்கிறது ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை. எல்லோருக்கும் வீடு எனும் கனவு உறுதியாக வேண்டும் என்றால், அரசின் பார்வை ரியல் எஸ்டேட் தாதாக்களின் மீது விழ வேண்டும்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்ட விரோதமாக அகதிகளை ஏற்றிவரும் படகுகளைச் சுட்டுத்தள்ள முடிவெடுத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். “போர், கலகம் என்று ஓடிவரும் மக்களை இப்படி அழித்தொழிக்க முடிவெடுப்பது பைத்தியக்காரத்தனம்” என்றெல்லாம் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தாலும் ஜூன் முதல் இந்த முடிவை அமலாக்குவதில் தீவிரமாக இருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.